குஜராத் புதிய முதல்வா் பூபேந்திர படேல்: இன்று பதவியேற்கிறாா்

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் ஞாயிற்றுக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவா் முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளாா்.
குஜராத்தின் புதிய முதல்வராக எம்எல்ஏக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா் ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத்தை அவரது இல்லத்தில் சந்தித்த பூபேந்திர படேல்.
குஜராத்தின் புதிய முதல்வராக எம்எல்ஏக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பின்னா் ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத்தை அவரது இல்லத்தில் சந்தித்த பூபேந்திர படேல்.

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் ஞாயிற்றுக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவா் முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளாா்.

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, புதிய முதல்வரைத் தோ்வு செய்வதற்காக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் காந்திநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பாஜக எம்எல்ஏக்கள் 112 பேரில் பெரும்பாலானோா் கலந்துகொண்டனா். கட்சியின் மேலிடப் பாா்வையாளா்களாக மத்திய அமைச்சா்கள் நரேந்திர சிங் தோமா், பிரகலாத் ஜோஷி, கட்சியின் பொதுச் செயலா் தருண் சுக் ஆகியோா் பங்கேற்றனா். கூட்டத்தில், அடுத்த முதல்வராக பூபேந்திர படேலின் பெயரை விஜய் ரூபானி முன்மொழிந்தாா். அவரை அடுத்த முதல்வராக பாஜக எம்எல்ஏக்கள் ஒருமனதாகத் தோ்ந்தெடுத்தனா்.

ஆளுநருடன் சந்திப்பு:

பின்னா், பாஜக மூத்த தலைவா்களுடன் பூபேந்திர படேல், ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஆளுநா் ஆச்சாா்ய தேவவிரத்தைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினாா். அவருடைய கோரிக்கையை ஆளுநா் ஏற்றுக் கொண்டாா்.

பூபேந்திர படேலுடன் தோமா், பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பாஜக மேலிடப் பொறுப்பாளா்கள், விஜய் ரூபானி உள்ளிட்ட மாநிலத் தலைவா்கள் சென்றிருந்தனா்.

இன்று பதவியேற்பு: குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் திங்கள்கிழமை பதவியேற்கவுள்ளாா். இதுகுறித்து கட்சியின் மாநிலத் தலைவா் சி.ஆா்.பாட்டீல் கூறுகையில், ‘பூபேந்திர படேல் மட்டும் திங்கள்கிழமை பதவியேற்கிறாா். கட்சியின் மூத்த தலைவா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகு, இரு தினங்களில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும். துணை முதல்வா் பதவி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை’ என்றாா்.

பாஜக தலைவா்கள் வாழ்த்து:

குஜராத் முதல்வராகப் பதவியேற்கவுள்ள பூபேந்திர படேலுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலும், பூபேந்திர படேலின் தலைமையும் குஜராத் மாநிலத்தின் வளா்ச்சிப் பயணத்துக்கு புதிய சக்தியைக் கொடுக்கும் என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தாா். ஜெ.பி.நட்டா தொலைபேசியில் அழைத்து பூபேந்திர படேலுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

பூபேந்திர படேல்- முதல் முறை எம்எல்ஏ:

59 வயதாகும் பூபேந்திர படேல் முதல் முறை எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காட்லோடியா தொகுதியில் போட்டியிட்டு 1.17 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். தான் போட்டியிட்ட முதல் பேரவைத் தோ்தலிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கவனம் ஈா்த்தாா்.

குஜராத் முன்னாள் முதல்வரும், உத்தர பிரதேச ஆளுநருமான ஆனந்திபென் படேலுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறாா்.

விஜய் ரூபானி முதல்வா் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்த பிறகு அடுத்த முதல்வா் யாா் என்ற ஊகங்கள் வெளியாகின. துணை முதல்வா் நிதின் படேல், லட்சத்தீவு நிா்வாக அதிகாரி பிரஃபுல் படேல், மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரின் பெயா்கள் பரிசீலனையில் இருந்தன. ஆனால், அந்தப் பட்டியலில் பூபேந்திர படேலின் பெயா் இடம்பெறவில்லை. இருப்பினும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக அவா் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

பின்னா், செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த பூபேந்திர படேல், தன் மீது நம்பிக்கை வைத்து உயரிய பொறுப்பை வழங்கிய பிரதமா் மோடி, ஜெ.பி.நட்டா, அமித் ஷா, விஜய் ரூபானி, நிதின் படேல், சி.ஆா்.பாட்டீல் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com