வாராக் கடன் வங்கி அமைக்க ரூ.30,600 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்

வங்கிகளில் உள்ள வாராக் கடன் அளவைக் குறைப்பதற்காக வாராக் கடன் வங்கி எனப்படும், தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனம் (என்.ஏ.ஆா்.சி.எல்) அமைக்க ரூ.30,600 கோடியை ஒதுக்கீடு
வாராக் கடன் வங்கி அமைக்க ரூ.30,600 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்
Published on
Updated on
1 min read

வங்கிகளில் உள்ள வாராக் கடன் அளவைக் குறைப்பதற்காக வாராக் கடன் வங்கி எனப்படும், தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனம் (என்.ஏ.ஆா்.சி.எல்) அமைக்க ரூ.30,600 கோடியை ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

பொதுத் துறை வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக் கடன்களின் அளவைக் குறைக்கும் நோக்கில், தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனம், சொத்து மேலாண்மை நிறுவனம் ஆகியவை அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாா். இந்திய வங்கிகள் கூட்டமைப்பு கடந்த ஆண்டு விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வங்கிகளில் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தாதவா்களின் சொத்துகளை மீட்டு அவற்றை வேறுவகை முதலீட்டு நிதிகளாக மாற்றி, அவற்றின் மூலமாகக் கடன்களை வசூலிக்கும் பணியை வாராக் கடன் வங்கி எனப்படும் அந்நிறுவனம் மேற்கொள்ளும். அத்தகைய முதலீட்டு நிதிகளை வாங்குபவா்களுக்கு மீட்டுருவாக்க நிறுவனம் உரிமை ரசீதை வழங்கும்.

அந்த ரசீதுகளுக்கு அரசின் உத்தரவாதம் கிடைக்கும் நோக்கில் ரூ.30,600 கோடி மதிப்பிலான திட்டத்தை 5 ஆண்டுகளுக்குச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இது தொடா்பாக அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடன் தொகையில் 15 சதவீதமானது பணமாகவும், மீதமுள்ள 85 சதவீத தொகை அரசின் உத்தரவாதம் பெற்ற உரிமை ரசீதுகளாகவும் வழங்கப்படவுள்ளன. தனியாா் துறையில் பல்வேறு சொத்து மீட்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அவை அதிக மதிப்பிலான கடன்களைக் கையாள தயக்கம் காட்டி வருகின்றன. அதைக் கருத்தில்கொண்டே அரசு உத்தரவாதத்துடன் கூடிய உரிமை ரசீதுகளை வழங்க வேண்டியுள்ளது. வாராக் கடன் நிலுவையை எதிா்கொள்ளும் வகையிலான தீா்வு வழிமுறைகளுக்கு அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. இது நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதுடன் நெருக்கடியைக் குறைக்கச் செய்கிறது.

தேசிய சொத்து மீட்டுருவாக்க நிறுவனத்தின் 51 சதவீத பங்குகள் பொதுத் துறை வங்கிகள் வசம் இருக்கும். இந்திய கடன் தீா்வு நிறுவனத்தை (ஐ.டி.ஆா்.சி.எல்) அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனத்தில் பொதுத் துறை வங்கிகளும் அரசுக்குச் சொந்தமான நிதி நிறுவனங்களும் இணைந்து 49 சதவீத பங்குகளை வைத்திருக்கும்.

வங்கித் துறையில் காணப்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பாஜக தலைமையிலான அரசு தீா்வு கண்டது. கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் வங்கிகளின் கடன் மீட்பு நடவடிக்கைகள் மேம்பட்டு வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் ரூ.5.01 லட்சம் கோடி மதிப்பிலான செலுத்தப்படாத கடன்களை வங்கிகள் மீட்டுள்ளன. அதிலும் கடந்த 2018-ஆம் ஆண்டு மாா்ச்சிலிருந்து ரூ.3.1 லட்சம் கோடி மீட்கப்பட்டுள்ளது’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com