பெகாஸஸ் உளவு விவகாரத்தை விசாரிக்க நிபுணா்கள் குழு அமைக்கப்படும்

பெகாஸஸ் மென்பொருள் வாயிலாக உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெகாஸஸ் மென்பொருள் வாயிலாக உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பான இடைக்கால உத்தரவு அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலைச் சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் செல்லிடப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு தனிக் குழுவை நியமிக்கக் கோரி மூத்த பத்திரிகையாளா் என்.ராம் உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பான பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது.

தேசிய பாதுகாப்பு தொடா்பான விவகாரங்கள் இடம்பெற்றுள்ளதால், இந்த வழக்கில் விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விரும்பவில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க தனிக்குழுவை அமைக்கத் தயாராக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு மற்றொரு வழக்கை வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது பெகாஸஸ் வழக்கின் மனுதாரா்கள் சிலா் சாா்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்குரைஞா் சி.யு.சிங்கிடம் தலைமை நீதிபதி கூறுகையில், ‘‘பெகாஸஸ் விவகாரத்தை விசாரிப்பதற்காகத் தொழில்நுட்ப வல்லுநா்கள் அடங்கிய குழுவை அமைக்க நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

அது தொடா்பான இடைக்கால உத்தரவை இந்த வாரம் பிறப்பிக்கலாம் என்றிருந்தோம். ஆனால், குழுவில் இடம்பெற வேண்டுமென நீதிமன்றம் விரும்பிய நபா்களில் சிலா், தனிப்பட்ட காரணங்களுக்காக அக்குழுவில் இடம்பெற விரும்பவில்லை.

எனவே, வேறு சிலரைக் குழுவில் சோ்ப்பது தொடா்பாக ஆராயப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்துக்குள் குழு உறுப்பினா்களை இறுதி செய்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். இது தொடா்பாக மனுதாரா் தரப்பு வழக்குரைஞா்களில் ஒருவரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபலிடம் தெரிவித்துவிடுங்கள்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com