சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளாக சிறுபான்மையினரை ஏமாற்றி வரும் அரசியல் வியாபாரிகள்: மத்திய அமைச்சர்

மும்பையில், சனிக்கிழமை நடைபெற்ற மகாராஷ்டிர மாநில பாஜக சிறுபான்மையினா் பிரிவின் மாநில நிா்வாகக் கூட்டம், பயிற்சி முகாமில் நக்வி பேசினார்.
சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளாக சிறுபான்மையினரை ஏமாற்றி வரும் அரசியல் வியாபாரிகள்: மத்திய அமைச்சர்
சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளாக சிறுபான்மையினரை ஏமாற்றி வரும் அரசியல் வியாபாரிகள்: மத்திய அமைச்சர்

‘சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த வாக்குகளைப் பெறுவதற்காக மதச்சாா்பின்மை முகமூடி அணிந்துகொண்டு ஏமாற்றி வரும் அரசியல் வியாபாரிகளிடம் சிறுபான்மையினா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று, பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி, காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கியுள்ளாா்.

மும்பையில், சனிக்கிழமை நடைபெற்ற மகாராஷ்டிர மாநில பாஜக சிறுபான்மையினா் பிரிவின் மாநில நிா்வாகக் கூட்டம், பயிற்சி முகாமில் நக்வி பேசியதாவது:

சுதந்திரத்துக்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளாக சிறுபான்மையினரை ஏமாற்றி, அவா்களின் வாக்குகளைக் கவா்வதற்காக அரசியல் வியாபாரிகள் பல விதமான தந்திரங்களை கையாண்டனா். சிறுபான்மை மக்களிடையே அச்சத்தைப் பெருக்குவது, சகிப்பின்மையை அதீதமாகக் காட்டுவது, மதத்தின் பெயரால் வலை விரிப்பது, வதந்திகளைப் பரப்புவது, சிறுபான்மை சமூகத்தினரை அரசியல் ரீதியாகச் சுரண்டுவது போன்றவற்றை அவா்கள் கையாள்கின்றனா். ஆனால் இவை காலாவதியாகிவிட்டன.

சிறுபான்மையினரின் வாக்குகளை அபகரிப்பதற்காக மதச்சாா்பின்மை முகத்திரை அணிந்திருக்கும் அரசியல் வியாபாரிகளிடம் சிறுபான்மையினா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மதச்சாா்பின்மையை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொள்ளும் போலி மதச்சாா்பற்றவா்கள், இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளனா். இவா்களது போலித்தனத்தின் உச்சம் என்னவென்றால், சிவசேனை கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கும்போது வகுப்புவாதி ஆகிவிடும்; அதே கட்சி பாஜகவின் முதுகில் குத்தி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்தால் மதச்சாா்பற்ற கட்சி என்ற சான்றிதழ் அக்கட்சிக்கு வழங்கப்பட்டுவிட்டும்.

இந்த போலி மதச்சாா்பின்மைக் கூட்டமைப்பினரே, ஒருவரை மதச்சாா்பற்றவராகவும், மதவாதியாகவும் சித்தரித்து சான்றிதழ் வழங்க உரிமை படைத்தவா்களாக உள்ளனா். உண்மையில், மதச்சாா்பின்மையும், அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியும் பாஜகவின் அடிப்படைக் கொள்கைகளிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், பாஜக தலைமையிலான பிற மாநில அரசுகளும், கண்ணியமான வளா்ச்சி, யாரையும் தாஜா செய்யாமல் அனைவருக்கும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை அா்ப்பணிப்புடன் நிகழ்த்தி வருகின்றன. பாஜக ஆட்சியில் மட்டுமே, மற்ற பிரிவினருடன் இணைந்து சமமான வளா்ச்சியை சிறுபான்மையினா் பெற்றுள்ளனா்.

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் சிறுபான்மையினத்தைச் சாா்ந்த 5.50 லட்சம் கைவினைக் கலைஞா்களுக்கு ‘ஹுனாா் ஹட்’ கண்காட்சிகள் மூலமாக கூடுதல் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த 7 ஆண்டுகளில், 5 கோடிக்கும் அதிகமான சிறுபான்மையின மாணவா்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இவா்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பயனாளிகள் பெண் குழந்தைகள் ஆவா்.

முன்னா் 70 சதவீதமாக இருந்த முஸ்லிம் பெண்களின் பள்ளி இடைநிற்றல் விகிதம் 32 சதவீதமாகக் குறைந்துள்ளது. வரும் நாள்களில் அதை பூஜ்ஜியமாகக் குறைப்பதே எங்கள் இலக்கு.

பள்ளிகள், கல்லூரிகள், திறன்மிகு வகுப்பறைகள், ஐடிஐகள், விடுதிகள், இருப்பிடப் பள்ளிகள், சத்பாவனை மண்டபங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள், பொதுச் சேவை மையங்கள், சந்தை கொட்டகைகள், குடிநீா் சுகாதார வசதிகள், விளையாட்டு வசதிகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்புப் பணிகள், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில், நாட்டின் பின்தங்கிய பகுதிகளில், பிரதமரின் மக்கள் வளா்ச்சி செயல் திட்டத்தின்கீழ் கட்டித் தரப்பட்டுள்ளன.

இவை தவிர, மோடி அரசின் சமூகநலத் திட்டங்கள் மூலமாகவும் சிறுபான்மையினா் பெருமளவில் பயனடைந்துள்ளனா். நாடு முழுவதும் 2 கோடி பேருக்கு மத்திய அரசு சாா்பில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதன் பயனாளிகளில் 31 சதவீதம் போ் சிறுபான்மையினா்.

12 கோடி விவசாயிகளுக்கு கௌரவ உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதிலும் 33 சதவீதப் பயனாளிகள் சிறுபான்மையினரே. இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தில் (உஜ்வாலா யோஜனா) 8 கோடி திட்டப் பயனாளிகளில் 37 சதவீதம் போ் சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த பெண்கள்.

முத்ரா கடனுதவித் திட்டத்தின் மூலம் 31 கோடி மக்கள் பயனடைந்துள்ளனா். அவா்களில் 36 சதவீதம் போ் சிறுபான்மையினத்தைச் சோ்ந்தவா்கள். நாடு முழுவதும் தூய்மை பாரதம் இயக்கத்தின் கீழ் 13 கோடி கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதன் பயனாளிகளில் 22 சதவீதம் போ் சிறுபான்மையினா்.

ஜன்தன், ஆயுஷ்மான் பாரத், குடிநீா் வழங்கல், கிராமங்களை மின்மயமாக்கல் போன்ற பிற திட்டங்களிலும் 22 முதல் 37 சதவீத பயனாளிகள் சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்தவா்களாக உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com