
அஜய் கோதியால் (படம்: ஆம் ஆத்மி)
உத்தரகண்ட் பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அஜய் கோதியால் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.
தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் சென்றுள்ளார். உத்தரகண்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அஜய் கோதியாலை அரவிந்த் கேஜரிவால் அறிவித்தார்.
இதையும் படிக்க | சமையல் எரிவாயு உருளை விலை ரூ.25 உயர்வு
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:
"உத்தரகண்டிலுள்ள அரசியல்வாதிகளால் விரக்தியடைந்த மக்களிடமிருந்து கருத்து கேட்கப்பட்டதன் அடிப்படையில் கோதியாலை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது. மாநிலத்தைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளிடமிருந்து மக்களுக்கு இடைவெளி தேவைப்படுகிறது. பதவிக் காலத்தில் தனது சொந்த கஜானாவை நிரப்பும் முதல்வர் அவர்களுக்குத் தேவையில்லை. அவர்களுக்கு சேவையாற்றும் ராணுவ வீரரே முதல்வராகத் தேவை.
ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால், ஹிந்துக்களுக்கான உலகளாவிய ஆன்மிகத் தலைநகராக உத்தரகண்ட் மாற்றப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்."