தடுப்பூசி போட்டவர்களுக்கும் 'டெல்டா பிளஸ்' கரோனா பாதிப்பு ஏற்படலாம்: ஐசிஎம்ஆர் ஆய்வு

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
தடுப்பூசி போட்டவர்களுக்கும் 'டெல்டா பிளஸ்' கரோனா பாதிப்பு ஏற்படலாம்: ஐசிஎம்ஆர் ஆய்வு

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

டெல்டா கரோனா வைரஸின் உருமாறிய வகையான, டெல்டா பிளஸ் கரோனா வகை குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) சென்னையில் ஓர் ஆய்வு நடத்தியது. 

ஐசிஎம்ஆர் - தேசிய தொற்றுநோயியல் நிறுவன நெறிமுறைக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட இந்த  ஆய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 17ல் 'ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி, உருமாறிய டெல்டா வைரஸான 'டெல்டா பிளஸ்' அல்லது பி.1.617.2 வைரஸ் தொற்று ஏற்படுவது, தடுப்பூசி போட்டவர்களுக்கும் தடுப்பூசி போடாதவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் தடுப்பூசி போட்டவர்களுக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களின் இறப்பு விகிதம் குறைவாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. 

எனினும் இந்த வகை வைரஸின் புதிய மாறுபாடுகளின் தோற்றத்தைக் கண்காணிக்க வேண்டும், தடுப்பூசியால் எந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்பது குறித்தும் மதிப்பிட வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும், 'கரோனாவின் அடுத்த அலைகளைத் தடுக்க தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்த வேண்டும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, பயணங்களைத் தவிர்த்தல், மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல் உள்ளிட்ட அனைத்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றுவது தொற்று பரவுவதைத் தடுக்கும். 

2021 ஏப்ரல்-மே மாதங்களில் கரோனா நோய்த்தொற்றின் மோசமான இரண்டாவது அலையை இந்தியா சந்தித்தது. தடுப்பூசிகள் தொடர்ந்து போடப்பட்டாலும் வைரஸ் உருமாறிக்கொண்டே இருந்தது இத்தகைய பாதிப்புக்கு காரணமாக இருக்கலாம். 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின்போது மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்று சென்னை.  மே மாதம் மூன்று வாரங்களில் சராசரி தினசரி பாதிப்பு 6000 எனப் பதிவாகியுள்ளன. இந்த ஆய்வில் சென்னையில் மூன்று கரோனா மையங்களைச் சேர்ந்த நோயாளிகளும் அடங்குவர். 

இதன்படி மே முதல் வாரத்தில் கரோனா பரிசோதனை மையங்களுக்குச் சென்ற 3,790 பேரில், 373 பேர் தொற்று ஏற்படுவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் போட்டிருந்தனர். மீதமுள்ள 3,417 பேர் தடுப்பூசி போடவில்லை. இருப்பினும், அறிக்கையின்படி, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குழுவில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அதேநேரத்தில் ஒரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட அல்லது தடுப்பூசி போடாத ஏழு நோயாளிகள் உயிரிழந்தனர். 

ஆனால், ஆய்வில் 373 பேரில் 354 (94.9 சதவீதம்) பேர் மட்டுமே தடுப்பூசி போட்டிருந்தனர். இவர்களில் 241 பேர் ஒரு தவணையும் 113 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் எடுத்திருந்தனர். 

தடுப்பூசி செலுத்தாத 3,417 பேரில் 185 பேர் (5.4 சதவீதம்) கூடுதலாக ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடாத, ஒரு தவணை தடுப்பூசி மற்றும் இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் சராசரி வயது முறையே 47, 53 மற்றும் 54 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், ஆய்வில் பங்கேற்பாளர்களில் சுமார் 5 சதவிகிதத்தைப் பின்தொடர முடியவில்லை' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com