
கோப்புப்படம்
அக்டோபருக்குள் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசி தயாரிக்கப்படும் என சைடஸ் கேடிலா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வயது வந்தோருக்கும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த சைடஸ் கேடிலா நிறுவனத்திற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபருக்குள் ஒரு மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என சைடஸ் கேடிலா நிறுவனத்தின் நிர்நாக இயக்குநர் ஷர்வில் படேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "டிசம்பர் - ஜனவரி மாதத்திற்குள் 3 முதல் 5 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்ற அரசின் உறுதிமொழியை நிறைவேற்ற முடியவில்லை. தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொண்டு கூட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தயாரிப்பது குறித்து மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.
புதிய தொழில்நுட்பம், விநியோக சங்கிலி ஆகியவற்றை கணிக்கில் கொண்டு தடுப்பூசியின் விலை நிர்ணயிக்கப்படும்" என்றார்.
பயோடெக்னாலஜி துறையின் உதவியோடு மூன்று தவணை தடுப்பூசியாக ZyCoV-D தடுப்பூசி தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட இரண்டாவது தடுப்பூசி சைடஸ். முன்னதாக, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சினுக்கு அவசர கால பயன்பாட்டிற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
மொத்தமாக, இதுவரை, ஆறு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.