வளையல் விற்ற முஸ்லிம் மீது தாக்குதல்: பாலியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டதால் பதற்றம்

ம.பி.யில் வளையல் விற்ற முஸ்லிம் தாக்கப்பட்டதுடன் அவர் மீதே பாலியல் வழக்கும் பதிந்து கைது செய்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஸ்லீம் அலி மீது தாக்குதல் நடத்தும் கும்பல்.
தஸ்லீம் அலி மீது தாக்குதல் நடத்தும் கும்பல்.

ம.பி.யில் இந்தூரில் வளையல் விற்ற முஸ்லிம் தாக்கப்பட்டதுடன் அவர் மீதே பாலியல் வழக்கும் பதிந்து கைது செய்திருப்பது பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஆளும் பாஜகவினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

உத்தரபிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்லீம் அலி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தூர் நகரின் கோவிந்த் நகர் என்ற பகுதியில் வளையல் விற்று கொண்டிருந்தார். அப்போது அவரை தாக்கிய கும்பல், அலியிடம் இருந்த ரூ. 10,000 பணம் மற்றும் ரூ. 25,000 மதிப்பிலான வளையலை பறித்தனர். மேலும், அவரது செல்போனை உடைத்துவிட்டு ஹிந்து மக்கள் வசிக்கும் பகுதியில் வியாபாரம் செய்ய வரக்கூடாது என மிரட்டியுள்ளனர்.

அலியை தாக்கியவர்கள் தரப்பில், மூன்று வெவ்வேறு அடையாள அட்டைகளுடன் வியாபாரத்தில் ஈடுபட்ட அலி, ஒரு பெண் வாடிக்கையாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டு 10 மணிநேரம் கழித்து தஸ்லீம் மீது பாலியல் தொந்தரவு, ஏமாற்றுதல், போலி சான்று வைத்திருத்தல் குற்றங்களின் அடிப்படையில் போக்ஸோ உள்ளிட்ட 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், வளையல் விற்பனையாளரான தஸ்லீம் அலி, பெண் வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்காக வீட்டிற்குள் சென்றபோது, அப்பெண்ணின் ஆறாவது படிக்கும் பெண் குழந்தையை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், இதுகுறித்து அச்சிறுமி புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்தூர் ஐ.ஜி. ஹரிநாராயண்சாரி மிஸ்ரா கூறுகையில், “தஸ்லீம் அலி வைத்திருந்த இரண்டு ஆதார் மற்றும் ஒரு வாக்காளர் அட்டையில் வெவ்வேறு தகவல்கள் உள்ளன. இதையடுத்து உண்மையான அடையாளத்தை கண்டறிய உ.பி.யில் உள்ள அவரின் சொந்த கிராமத்தில் விசாரணை மேற்கொள்ள காவலர்கள் சென்றுள்ளனர்” என்றார். 

இதற்கிடையே ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “வளையல் விற்பனையாளர் தஸ்லீம், இந்தூரில் ஒரு கும்பலால் இரக்கமின்றி தாக்கப்பட்டார். ஆனால், இப்போது தஸ்லீம் மீது மட்டும் காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

தில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகையில், அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வளையல் விற்பனையாளரை அடித்திருப்பது, வகுப்புவாத மோதலை தூண்டுவதற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஓவைசியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “மத்தியப் பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களுக்கு யாரும் அனுமதிக்க மாட்டார்கள். மூன்று வெவ்வேறு அடையாள அட்டைகளை வைத்து உண்மைத் தன்மையை மறைக்கும் எவரும் குற்றவாளிகளே என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com