டேஹ்ராடூனில் வீடு கட்டத் தொடங்கிய விபின் ராவத்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாய்னா கிராமமும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஹாஹ்டோல் மாவட்டத்தின் சோஹாக்பூர் சமஸ்தானமும் புதன்கிழமை சோகத்தில் ஆழ்ந்தன.
டேஹ்ராடூனில் வீடு கட்டத் தொடங்கிய விபின் ராவத்
டேஹ்ராடூனில் வீடு கட்டத் தொடங்கிய விபின் ராவத்


டேஹ்ராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாய்னா கிராமமும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஹாஹ்டோல் மாவட்டத்தின் சோஹாக்பூர் சமஸ்தானமும் புதன்கிழமை சோகத்தில் ஆழ்ந்தன.

ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைகளின் தளபதி விபின் ராவத் உத்தரகண்ட் மாநிலம் சாய்னா கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி மதுலிகா, சோஹாக்பூர் சம1தானத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு கடந்த 1985ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

விபின் ராவத், தனது சொந்த ஊரான டேஹ்ராடூனில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். இதற்காக, கடந்த வாரம், அவரது மனைவி மதுலிகா பங்கேற்று பூமிபூஜை நடைபெற்றது. வேகமாக வீடு கட்டும் வேலை தொடங்கி நடந்து வந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து செய்தி வெளியானதும், வீடு கட்டும் வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டன.

விபின் ராவத்தின் நெருங்கிய உறவினர் பாரத் சிங் ராவத் கூறுகையில், முப்படைகளின் தலைமை தளபதியாக, விபின் ராவத் பதவியேற்றபோது, ஒட்டுமொத்த கிராமமும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இன்று இந்த துயர விபத்து குறித்து கேட்டதும், ஒட்டுமொத்த கிராமமும் சோகத்தில் ஆழ்ந்தது.

அவர் எப்போதும் என்னிடம் இங்கு ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இந்த கிராமத்துக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த சாலை அமைக்குமாறு அரசிடம் கோரிக்கையும் வைத்திருந்தார் என்கிறார் கண்களில் கண்ணீரோடு.

போபாலில் வசித்து வரும் ராவத் மனைவியின் சகோதரர் யஷ்வர்தன் சிங் கூறுகையில், ராணுவத்திடமிருந்து எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. உடனடியாக தில்லி வருமாறு கூறினார்கள். இதில் ஏதோ மிக மோசமான விஷயம் இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. நானும் எனது மனைவியும் தில்லிக்குச் செல்கிறோம் என்கிறார் .

வரும் புத்தாண்டைக் கொண்டாட ஊருக்கு வருவதாக இருவரும் வாக்களித்திருந்ததாகவும், ஆனால், அந்த வருகை ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்று நினைக்கவேயில்லை என்றும் கூறுகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com