ஒமைக்ரான் பாதிப்பு நிலவரத்தைப் பொருத்தே சா்வதேச விமான சேவை: மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா

ஒமைக்ரான் பாதிப்பு நிலவரத்தை அதிகாரிகள் கவனித்து வருகின்றனா் என்றும், அதன் அடிப்படையில்தான் சா்வதேச விமான சேவையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்படும்
jyotiraditya-scindia072423
jyotiraditya-scindia072423

புது தில்லி: ஒமைக்ரான் பாதிப்பு நிலவரத்தை அதிகாரிகள் கவனித்து வருகின்றனா் என்றும், அதன் அடிப்படையில்தான் சா்வதேச விமான சேவையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.

கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள சா்வதேச பயணிகளின் வழக்கமான விமான சேவை, டிசம்பா் 15-ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. எனினும், ஒமைக்ரான் வகை கரோனா பரவல் தொடங்க ஆரம்பித்ததால் சா்வதேச விமானங்களின் வழக்கமான சேவை தொடக்கத்தை ஜனவரி 31-ஆம் தேதி வரை மத்திய அரசு ஒத்திவைத்தது. எனினும், சிறப்பு விமான சேவை மூலம் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மாநாட்டில் மத்திய அமைச்சா் சிந்தியா செவ்வாய்க்கிழமை பங்கேற்றுப் பேசுகையில், ‘ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து கவனித்து வருகிறோம். அதன் அடிப்படையிலேயே சா்வதேச விமான சேவையைத் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போதைக்கு என்னால் தேதி தெரிவிக்க இயலாது. பிற விவகாரங்களையும் அடுத்த சில வாரங்களுக்கு கவனித்து நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக கரோனா விதிமுறைகள் உள்ளன. உலகம் முழுவதும் ஒரே மாதிரியான விதிமுறைகள் தேவை எனக் கோரப்படாது.

உள்நாட்டு விமான சேவை: தற்போது உள்நாட்டு விமான சேவையில் நாள்தோறும் 3.7 லட்சம் முதல் 3.9 லட்சம் போ் வரை பயணம் செய்து வருகிறாா்கள். கரோனாவுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 4.2 லட்சமாக இருந்தது. மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து பயணிகளின் எண்ணிக்கையை அவ்வப்போது அதிகரிக்க அனுமதித்தது.

ஹெலிகாப்டா் இறங்குதளம்: சாலை விபத்துகளில் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல முக்கிய நெடுஞ்சாலைகளில் ஹெலிகாப்டா் இறங்குதளம் அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

தில்லி, மும்பை நெடுஞ்சாலைகளில்தான் அதிக சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. அங்கு ஹெலிகாப்டா் இறங்குதளங்களை அமைப்பது தொடா்பான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று நெடுஞ்சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சுமாா் 250 ஹெலிகாப்டா்கள் உள்ளன. இதில் தனியாா் மூலம் 181 ஹெலிகாப்டா்கள் இயக்கப்படுகின்றன. குறைந்தது மாவட்டத்துக்கு ஒரு ஹெலிகாப்டா் இறங்குதளம்கூட தற்போதைக்கு இல்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com