சிறு குறு மற்றும் நடுத்தர துறையின் நிலை என்ன? ராகுல் காந்தியின் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்

கரோனா காலத்தில் ஒன்பது சதவிகித சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டது என அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா காலத்தில் ஒன்பது சதவிகித சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமரிசித்துள்ள ராகுல் காந்தி, இதன் மூலம் அரசின் நண்பர்கள் பலன் அடைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், "சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பற்றி அரசிடம் சில கடினமான கேள்விகளைக் கேட்டிருந்தேன், அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, கரோனா காலங்களில் ஒன்பது சதவீத சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இது எதை உணர்த்துகிறது என்றால், நண்பர்களுக்கு நன்மை பயத்துள்ளது. பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது. வேலைவாய்ப்புகளுக்கு முடிவு எட்டப்பட்டுள்ளது" என இந்தியில் பதிவிட்டுள்ளார். வியாழக்கிழமையன்று, தான் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலையும் இந்த பதவில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

மக்களவையில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு, "சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மீது கரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆராய தேசிய சிறுதொழில் கழகம் இணையம் வழியாக மதிப்பாய்வு நடத்தியது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 5,774 சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலிருந்து கருத்து கேட்கப்பட்டது.

அதில், 91 சதவீத சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் செயல்படுவதாகவும், ஒன்பது சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் மாநில வாரியான வாரக்கடன் பற்றிய தகவல்கள் தங்களிடம் இல்லை என ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது.

வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 9,052 சுயதொழில் செய்பவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 11,716 சுயதொழில் செய்பவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர துறை உரிமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் தற்கொலைத் தரவுகளை பணியகம் தனித்தனியாக வகைப்படுத்தவில்லை" என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com