'மனைவியிடம் தான் நலமாக இருப்பதை சொல்லச் சொன்ன வருண் சிங்'

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரோடு மீட்கப்பட்ட ஒரே நபரான வருண் சிங் டிசம்பர் 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பலியானார்.
கேப்டன் வருண் சிங்
கேப்டன் வருண் சிங்


பெங்களூரு: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரோடு மீட்கப்பட்ட ஒரே நபரான வருண் சிங் டிசம்பர் 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பலியானார்.

எம்ஐ-17 வி5 வகை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானபோது, எரிந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரிலிருந்து, வெளியே வந்த வருண் சிங், அங்கு மீட்புப் பணிக்காக விரைந்து வந்த மக்களிடம் பேசியுள்ளார்.

இந்தத் தகவலை, போபாலில், அவரது தந்தை முன்னாள் விமானப் படை அதிகாரி கே.பி. சிங் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் பேசுகையில் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது, எனது மகனுக்கு 95 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருந்தது. எனினும், எரிந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரிலிருந்து அவர் எழுந்து நடந்து வெளியே வந்துள்ளார். அங்கே மீட்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் அவர் தன்னைப்பற்றி கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல, அவர் தனது மனைவியின் செல்லிடப்பேசியை அங்கிருந்தவர்களிடம் தெரிவித்து, அவரது பெயர் கீதாஞ்சலி என்றும், அவரை தொடர்பு கொண்டு, தான் நலமாக இருப்பதாகத் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.

வருண் சிங்கின் கோரிக்கையை ஏற்று, அங்கிருந்தவர்களும், கீதாஞ்சலியை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதன் மூலமாகத்தான், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில், வருண் சிங்கும் இருந்துள்ளார் என்பதே எங்களுக்குத் தெரிய வந்தது. மேலும், ஹெலிகாப்டரில் இருப்பவர்கள் படுகாயமடைந்திருப்பதாகவும், உடனடியாக அவர்களை மீட்க உதவுமாறும் வருண் கூறி கூறியுள்ளார். 

விபத்து நடந்த போது நான் மும்பையில் இருந்தேன். தொலைக்காட்சியில், விமான விபத்து குறித்து செய்தியைப் பார்த்தேன். ஆனால் அது பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வரை, வருண் சிங் நல்ல நினைவுடனே இருந்துள்ளார். அங்கு, அவருக்கு வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. தீக்காயம் அடைந்த அனைத்து நோயாளிகளுக்குமே இவ்வாறு செய்யப்படுவது வழக்கமானதுதான்.


பிறகு மெல்ல எங்களுக்கு பல விஷயங்கள் புரிந்தது. அந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட ஒரே நபர் வருண் சிங்தான் என்பது தெரிந்தது. அப்போதுதான் நாங்கள் வெலிங்டன் விரைந்தோம். தீவிர சிகிச்சைப் பிரிவின் வெளியிலிருந்து நாங்கள் அவரை பார்த்தோம். நாங்கள் வருண் சிங்கை நினைத்து பெருமைப்படுகிறோம் என்று கூறினார்.

மேலும் தனது மகன் பற்றி நெகிழ்ச்சியுடன் அவர் பேசுகையில், வருண் சிங் ஒரு சிறந்த மகன், சிறந்த கணவர், சிறந்த தந்தையாக இருந்தார். பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார். பல அதிகாரிகள் 40 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை என் மகன் 17 ஆண்டு சேவையில் சாதித்தான் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com