கையையும் காலையும் கட்டிப்போட்டுள்ளார்கள்: காங்கிரஸ் தலைமை குறித்து ஹரிஷ் ராவத் அதிருப்தி

காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவராக பார்க்கப்பட்ட உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், கட்சி தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஹரிஷ் ராவத்
ஹரிஷ் ராவத்

கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் 60க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து, கட்சி தலைமைக்கு எதிராக பல்வேறு மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

பலர் கட்சியை விட்டு வெளியேறி பிற கட்சிகளில் இணைந்துள்ளனர். சமீபத்தில், மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் ஆகியோர் கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

அந்த வரிசையில், உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்தின் கருத்து அரசியலில் பரபரப்பை கூட்டியுள்ளது. இதுகுறித்து இந்தியில் பதிவிட்ட அவர், "இது விசித்திரமாக இல்லையா? தேர்தல் என்ற கடலில் நாம் நீந்த வேண்டும், ஆனால் அந்த அமைப்பு என்னை ஆதரிப்பதற்குப் பதிலாக என்னைப் புறக்கணித்தது அல்லது எதிர்மறையான பாத்திரத்தை தந்துள்ளது. 

கடலில் பல முதலைகளை (வேட்டையாடுபவர்கள்) சுதந்திரமாக அலையவிட்டுள்ளோம். அதிகாரத்தின் மூலம் அதை தற்போது கண்டுபிடிக்க வேண்டும். நான் யாரை பின் தொடர்ந்து செல்ல வேண்டுமோ, அவர்களே என் கையையும் காலையும் கட்டி போட்டுள்ளனர். அது தொலைதூரம் சென்றுவிட்டதாக எனக்கு உணர்வு வந்துவிட்டது. போதுமான அளவுக்கு செய்து விட்டோம். தற்போது, ஓய்வு எடுக்க வேண்டும். 

ஆனால், என் தலைக்கு மேல் ஒரு குரல் கேட்டி கொண்டே இருக்கிறது. அது, நாம் பலவீனம் அடையவில்லை என்றும் சவால்களை கண்டு ஓடிவிடக்கூடாது என்றும் சொல்கிறது. எனக்கு பெரும் குழப்பமாக உள்ளது. இந்த புத்தாண்டு புதிய வழியை காட்டும் என நம்பிக்கை உள்ளது. கடவுள் கேதர்நாத் எனக்கு விழிகாட்டுவார் என நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

உத்தரகண்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஹரிஷ் ராவத் அதிருப்தி தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com