ஒமைக்ரான் பற்றி பிரிட்டனிலிருந்து வந்திருக்கும் நல்ல செய்திகள்

பல மடங்கு உருமாற்றமடைந்த புதிய ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பற்றி பிரிட்டனில் நடைபெற்ற இரண்டு ஆய்வுகளில் நல்ல செய்திகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒமைக்ரான் பற்றி பிரிட்டனிலிருந்து வந்திருக்கும் நல்ல செய்திகள்
ஒமைக்ரான் பற்றி பிரிட்டனிலிருந்து வந்திருக்கும் நல்ல செய்திகள்


லண்டன்: பல மடங்கு உருமாற்றமடைந்த புதிய ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பற்றி பிரிட்டனில் நடைபெற்ற இரண்டு ஆய்வுகளில் நல்ல செய்திகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒமைக்ரான் பற்றி பிரிட்டனில் நடத்தப்பட்ட இரண்டு முதற்கட்ட ஆய்வுகளில், ஒமைக்ரான் வகை கரோனா, டெல்டா வகை கரோனாவை விடவும் ஆபத்துக் குறைந்ததாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வுகளில் கிடைத்திருக்கும் முடிவுகள் அனைத்தும், ஆரம்பகால ஆய்வின் விவரங்கள்தான் என்பதை அழுத்திக் கூறும் விஞ்ஞானிகள், தீவிர பாதிப்பு குறைந்திருந்தாலும், டெல்டா வைரஸைக் காட்டிலும் ஒமைக்ரான் பரவும் வேகம் அதிகமாக இருப்பதை கவனிக்கவும், தடுப்பூசியின் எதிர்ப்பாற்றல் குறைவது காரணமாக இருக்கலாமா என்றும் ஆராய வேண்டியுள்ளது என்கிறார்கள். தற்போது வரை கரோனா பாதிப்புதான் அதிகரிக்கிறது, மறுபக்கம் மருத்துவமனைகளில் நோயாளிகளால் நிரம்பிவழியும் நிலை ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.

வான்டெர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மானுவெல் அஸ்கானோ ஜூனியர் நடத்திய ஆய்வின் முடிவுகள் புதன்கிழமை வெளியாகியுள்ளன. அதில், டெல்டா வைரஸைக் காட்டிலும், ஒமைக்ரான் வைரஸால் தீவிர பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையுடன் கூடுதல் எச்சரிக்கையுமே ஒமைக்ரானை எதிர்கொள்ள சிறந்த வழி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள இம்பெரியல் கல்லூரியின் கரோனா பொறுப்புக் குழுவின் கணக்கீட்டின்படி, இங்கிலாந்தில், ஒமைக்ரான் பாதித்தவர்களில், 20 சதவீதத்துக்கும் குறைவானவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்படுவதாகவும், இது டெல்டா பாதிப்பின்போது 40 சதவீதம் என்ற அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்தில், டிசம்பர் மாதத்தின் முதல் பாதி நாள்களில் பதிவான ஒட்டுமொத்த கரோனா பாதிப்பும் இதில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பில் 56,000 பேருக்கு ஒமைக்ரானும், 2,69,000 பேருக்கு டெல்டா வகை கரோனாவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் ஒருபுறமிருக்க, ஸ்காட்லாந்திலிருந்து வெளியாகியிருக்கிறது மற்றொரு ஆய்வு முடிவு. எடின்பர்க் பல்கலைக்கழகமும், மற்ற நிபுணர்களும் இணைந்து நடத்திய ஆய்வில், டெல்டா பாதித்தவர்களைக் காட்டிலும் ஒமைக்ரான் பாதித்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு குறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதேவேளையில், ஒமைக்ரான் பாதித்தவர்களின் பெரும்பாலானவர்கள், 20 முதல் 39 வயதுக்குள்பட்டவர்கள் என்றும், இளையவர்களுக்கு கரோனா பாதிப்பு தீவிரமடைவது குறைவாகவே இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆரம்பநிலையிலான ஆய்வு முடிவுகள் என்றபோதும் நம்பிக்கையளிப்பதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com