
புதுச்சேரி கடற்கரை சாலை
புதுச்சேரியில் இரண்டாவது நாளாக கனமழை தொடர்வதால், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென மழை பெய்தது. புதுச்சேரி நகர பகுதிகளான கடற்கரை சாலை, உப்பளம், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு உள்ளிட்ட இடங்களிலும், கிராம பகுதிகளான திருக்கனூர் கன்னியகோயில், அரியாங்குப்பம், மதகடிப்பட்டு, சேதரபட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காலை 8.30 மணிக்கு தொடங்கி 1 மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
இந்த திடீர் மழையின் காரணமாக இருசக்கர வாகன ஒட்டிகள் மற்றும் புத்தாண்டு கொண்டாட வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
புதுச்சேரியில் இன்று புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் பல மாநிலங்களில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், இரு நாள்களாக பெய்து வரும் மழை, தொடர்ந்து பெய்தால் புத்தாண்டு நிகழ்ச்சிகள் பாதிக்கப்படுமோ என சுற்றுலாப் பயணிகளிடையே சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு இசை விழா நடைபெறும் மையங்களில் மழையினால் ஏற்பட்ட பகுதிகளில் தூய்மை செய்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...