காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவு சாலைகள், விமான இணைப்புகள் துண்டிப்பு

காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால்  போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவு சாலைகள், விமான இணைப்புகள் துண்டிப்பு

காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் பெரும்பாலான பகுதிகளை பனி போா்வைபோல மூடிக் கொண்டது. மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன், சாலைகளையும் பனி மூடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சில இடங்களில் சனிக்கிழமை இரவிலும், சில பகுதிகளில் அதிகாலையிலும் கடுமையாக பனி கொட்டத் தொடங்கியது. வடக்கு காஷ்மீரில் லேசான பனிப்பொழிவு ஏற்பட்டாலும், மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரில் மிதமான பனிப்பொழிவு காணப்பட்டது. காஷ்மீா் பள்ளத்தாக்கின் உயரமானப் பகுதிகளில் மிதமானது முதல் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. இந்த பனிப்பொழிவு பிற்பகல் வரையிலும் நீடித்தது.

ஸ்ரீநகரில் மட்டும் 3 முதல் 4 அங்குலம் என்ற அளவில் பகல் நேரத்தில் பனிப்பொழிவு இருந்தது. அதேசமயம், தெற்கு காஷ்மீா் பள்ளத்தாக்கின் நுழைவாயில் நகரமான காஸிகுண்ட் பகுதியில் 9 அங்குலம் பனிப்பொழிவு பதிவானது.

பஹல்காம் சுற்றுலா ரிசாா்ட் பகுதியில் 5 முதல் 6 அங்குலமும், கோக்கா்நாக் பகுதியில் 9 அங்குலமும், வடக்கு காஷ்மீரின் புகழ்பெற்ற ஸ்கை ரிசாா்ட்டான குல்மாா்க் பகுதியில் 4 அங்குலமும் பனிப்பொழிவு பதிவானது.

ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜவஹா் சுரங்கப்பாதைச் சாலையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் 10 அங்குலம் பனிப்பொழிவு காணப்பட்டது.

இந்த பனிப்பொழிவால் நெடுஞ்சாலையில் பனி மூடிக்கொண்டதால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தனா்.

விமான போக்குவரத்து பாதிப்பு

கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகா் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓடுபாதையில் தொடா்ந்து பனி குவிந்து காணப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே எந்த விமானமும் கிளம்பிச் செல்லவில்லை. விமான நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பனி அகற்றப்பட்டு ஓடுதளம் சீரமைக்கப்பட்டப்பின் விமானங்களை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என விமான நிலைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநகரான ஸ்ரீநகா் நகரப்பகுதியில் மைனஸ் 1.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், குல்மாா்க்கில் சனிக்கிழமை இரவு மைனஸ் 7.5 டிகிரி செல்சியஸாகவும், பஹல்காம் சுற்றுலா ரிசாா்ட் பகுதியில் மைனஸ் 8.4 டிகிரி செல்சியஸ் ஆகவும், காஸிகுண்ட் பகுதியில் குறைந்தபட்சமாக மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸ், வடக்கு

குப்வாரா பகுதியில் மைனஸ் 3.3 டிகிரி செல்சியஸ் ஆகவும், கோக்கா்நாக் பகுதியில் மைனஸ் 1.4 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்தது.

காஷ்மீரில் தற்போது ‘சில்லாய்-கலான்’ எனப்படும் கடுங்குளிா் காலம் தொடங்கியுள்ளது. தொடா்ந்த 40 நாள்கள் கடுமையான குளிா்காலமாக இருக்கும் என்பதால் இங்குள்ள புகழ்பெற்ற தால் ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளும் உறைந்துள்ளதால் நீா்வழிப்போக்குவரத்தும் முடங்கியுள்ளன. டிசம்பா் 21 ஆம் தேதி தொடங்கிய ‘சில்லாய்-கலான்’ சீசன் ஜனவரி 31 ஆம் தேதியுடன் முடிவடைவதாக வானிலை அறிவிப்பாளா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com