கோவிஷீல்டு மருந்துகளுடன் முதல் விமானம் புணேவிலிருந்து புறப்பட்டது
கோவிஷீல்டு மருந்துகளுடன் முதல் விமானம் புணேவிலிருந்து புறப்பட்டது

கோவிஷீல்டு மருந்துகளுடன் முதல் விமானம் புணேவிலிருந்து புறப்பட்டது

புணே சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்துகளுடன் முதல் விமானம் இன்று காலை தில்லிக்குப் புறப்பட்டது.


புணே: புணே சர்வதேச விமான நிலையத்திலிருந்து கோவிஷீல்டு கரோனா தடுப்பு மருந்துகளுடன் முதல் விமானம் இன்று காலை தில்லிக்குப் புறப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், நான்கு நாள்களுக்கு முன்னதாக மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகள் அனுப்பும் பணி இன்று தொடங்கியது.

தடுப்பூசி மருந்துகள் அடங்கிய 478 பெட்டிகள் டிரக்கில் ஏற்றப்பட்டு, விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு பெட்டியும் 32 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும்.

மஞ்சரிப் பகுதியில் அமைந்துள்ள சீரம் மையத்திலிருந்து டிரக் மூலம் விமான நிலையத்துக்கு மருந்துகள்அ னுப்பி வைக்கப்பட்டன. விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் நாட்டின் 13 பகுதிகளுக்கு தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

தடுப்பூசி மருந்துகள் அடங்கிய வாகனங்கள் புறப்படும் முன்பு, வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.

கோவிஷீல்டு மருந்துகள் புணேவிலிருந்து தில்லி, ஆமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கர்னல், ஹைதராபாத், விஜயவாடா, குவகாத்தி, லக்னௌ, சண்டிகர், புவனேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது.

நாட்டு மக்களுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி முதலில் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதலாவது கரோனா பாதிப்பு, கடந்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி கேரளத்தில் கண்டறியப்பட்டது. சுமாா் ஓராண்டுக்குப் பிறகு அந்நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி நாட்டு மக்களுக்கு செலுத்தப்படவுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்), தேசிய தீநுண்மியியல் மையம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரித்தது. பிரிட்டனின் அஸ்ட்ரா ஸெனகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்த ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசியை, சீரம் மையம் இந்தியாவில் பரிசோதித்தது.

அவ்விரு தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியது. அதையடுத்து, கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான ஒத்திகை அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது.

தற்போது தடுப்பூசி மருந்துகள் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கும் பணி இன்று தொடங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com