அலிபாபாவும் சீனாவும்...!

 சீனாவின் பெரும் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள "அலிபாபா' நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா மாயமான விவகாரம் அந்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதுமே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அலிபாபாவும் சீனாவும்...!

 சீனாவின் பெரும் பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள "அலிபாபா' நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா மாயமான விவகாரம் அந்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதுமே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இவரைப் போன்ற பிரபலங்கள் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைவது அவ்வப்போது நடப்பதும், அதற்குப் பின்னணியில் அரசாங்கம் இருப்பதும் வழக்கமானதுதான் என்றாலும், ஜாக் மா விவகாரம் அதிர்வலைகளை உருவாக்கியிருப்பதை மறுக்க முடியாது.
 சீனாவுக்கு இரும்புத் திரை நாடு என்ற ஒரு பெயரும் உண்டு. ஊடகங்களுக்கு கட்டுப்பாடு, வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தடை, சமூக ஊடகங்கள் கண்காணிப்பு என சீன அரசின் இரும்புக்கரங்களை மீறி எந்த ஒரு தகவலும் எளிதாக வெளியே வராது. கொவைட்-19 நோய்த்தொற்று முதல் இப்போது ஜாக் மா விவகாரம் வரை பல உதாரணங்களை அதற்குச் சொல்லலாம்.
 யார் இந்த ஜாக் மா?
 ஆரம்ப காலத்தில் ஆங்கில ஆசிரியராக இருந்தார் ஜாக் மா. 1990-இல் அமெரிக்காவுக்கு சென்ற அவர், இணையம்தான் தனது வாழ்க்கையை மாற்றப் போகிறது என்பதைக் கண்டறிந்தார். இணையம் தொடர்பான பல திட்டப் பணிகளைச் செய்த ஜாக் மா, தன் நண்பர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்கள் கொடுத்த 60 ஆயிரம் டாலரை முதலீடாகக் கொண்டு 18 பேருடன் இணைந்து 1999-இல் சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தொடங்கியதுதான் அலிபாபா என்ற மின்னணு வர்த்தக நிறுவனம். சீன மக்களின் ஷாப்பிங் பழக்கத்தையே புரட்டிப்போட்ட அலிபாபா, இன்று 200-க்கு மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. பல நிறுவனங்களை ஜாக் மா நடத்தி வந்தாலும் அலிபாபாதான் அவருக்கு அடையாளம். மின்னணு வர்த்தகம் மட்டுமன்றி செயலிகள் உருவாக்கம், வங்கிகள், கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளிலும் அலிபாபா ஈடுபட்டு வருகிறது. இன்றைய நாளில் சுமார் 48 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனாவின் பெரும் பணக்காரர்களில் முதலிடத்தில் இருக்கிறார் ஜாக் மா. கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது 55-ஆவது பிறந்த நாளில் அலிபாபாவின் தலைவர் பதவியிலிருந்து ஜாக் மா விலகினார். இருப்பினும், அவரது பங்கு விகிதங்களின் அடிப்படையில் இப்போதும் அவரது கட்டுப்பாட்டில்தான் அலிபாபா உள்ளது.
 சிக்கல் ஆரம்பம்
 எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் கடந்த அக்டோபர் மாதம் ஜாக் மாவுக்கு சிக்கல் ஆரம்பித்தது. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாக் மா, சீனாவின் அதிகாரத்துவ அமைப்புகளை விமர்சித்தார்; புதுமைகளை அவை தடுத்து நிறுத்துவதாகக் குற்றம்சாட்டினார்; அடுத்த தலைமுறைக்காக இப்போதைய நடைமுறைகளைச் சீர்திருத்த வேண்டுமென அறைகூவல் விடுத்தார்; சீன வங்கிகள் அடகுக் கடைகள்போல் செயல்படுவதாகச் சாடினார். ஏற்கெனவே அலிபாபா நிறுவனம் ஏகபோகத்தில் ஈடுபடுவதாகவும், மற்ற நிறுவனங்களை வளரவிடாமல் தடுப்பதாகவும் புகார் எழுந்துள்ள நிலையில், ஜாக் மாவின் இந்தப் பேச்சை சீன ஆட்சியாளர்கள் ரசிக்கவில்லை. இதையடுத்து, உடனடியாக மாவின் மற்றொரு நிறுவனமான ஆன்ட் குழுமத்துக்கான 37 மில்லியன் டாலர் சலுகைகளை சீன வங்கிகள் நிறுத்திவைத்தன. அலிபாபா, ஆன்ட் நிறுவனங்களின் மீதான விசாரணையும் அரசால் தொடங்கப்பட்டது.
 ஜாக் மா எங்கே?
 இந்த நிகழ்வைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 24-ஆம் தேதிமுதல் ஜாக் மாவை பொதுவெளியில் காண முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. தெரிந்தாலும் சொல்வதற்கு இதுவரை யாரும் முன்வரவில்லை. அவரது தொண்டு நிறுவனத்தின் சார்பில் தொழில்முனைவோர்களுக்காக நடத்தப்படும் "ஆப்பிரிக்காவின் பிசினஸ் ஹீரோக்கள்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜாக் மா ஒரு நடுவராகச் செயல்பட்டு வந்தார். அந்த நிகழ்ச்சியிலும் அவர் தோன்றவில்லை. அவர் அரசின் கண்காணிப்பில் இருப்பதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான பியூப்பிள்ஸ் டெய்லி செய்தி வெளியிட்டது. ஆனால், அதன் இணையதளத்திலிருந்து அந்தச் செய்தி உடனடியாக நீக்கப்பட்டது. அரசின் கண்காணிப்பு என்றால் அவர் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது அரசின் நடவடிக்கைகளால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். இதில் எது உண்மை என்பதில்தான் குழப்பம் நீடிக்கிறது.
 என்னவாகும் அலிபாபா?
 ஏகபோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக எழுந்துள்ள சந்தேகத்தின்பேரில் ஜாக் மாவின் அலிபாபா மற்றும் ஆன்ட் நிறுவனங்கள் மீது சீன அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விசாரணை தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே அதாவது கடந்த டிசம்பர் மாதத்தில் அலிபாபா நிறுவனம் 110 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை இழந்தது. இந்நிலையில், இந்த இரு நிறுவனங்களையும் தேசியமயமாக்க அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 ஆனால், இந்த நடவடிக்கை ஓர் எதிர்மறையான எண்ணத்தையும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் அரசின் அல்லது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடின்றி சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாக உலக முதலீட்டாளர்களை நம்ப வைத்துள்ளன. ஆனால், தற்போது ஜாக் மாவின் விவகாரம் அந்த நம்பிக்கையில் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்தியாவும், அமெரிக்காவும் பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு சீன செயலிகளுக்குத் தடை விதித்துள்ள நிலையில், அலிபாபா மீதான சீன அரசின் இரும்புப் பிடியானது, சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வதிலோ அல்லது அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதிலோ மற்ற நாடுகளையும் யோசிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
 அலிபாபா நிறுவனத்தின் இலச்சினையில் ஒரு மகிழ்ச்சியான வாடிக்கையாளரின் உருவமும் இடம்பெற்றிருக்கும். ஆனால், இனி வரும் காலம் ஜாக் மாவுக்கு அத்தனை மகிழ்ச்சிகரமாக இருக்காது என்றே தோன்றுகிறது.
 லாமா முதல் ஜாக் மா வரை...
 சீனாவில் அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் அல்லது அரசுக்கு எதிராக செயல்படுவார்கள் என சந்தேகப்படக் கூடியவர்கள் காணாமல் போய் சில மாதங்கள் கழித்து வெளியே வருவதோ, நிரந்தரமாகக் காணாமல் போவதோ புதியதில்லை. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் தலாய் லாமாவால் நியமனம் செய்யப்பட்ட 11-ஆவது பஞ்சென் லாமா 1995-ஆம் ஆண்டு திடீரென மாயமானார். சீன அரசின் கட்டுப்பாட்டில்தான் அவர் இருக்கிறார். இருப்பினும் இன்றுவரை அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என்கிற தகவல் இல்லை. திபெத்திய பௌத்த மதத் தலைவராக தலாய் லாமா கருதப்படுகிறார். அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் பஞ்சென் லாமா சுதந்திரமாக செயல்படுவதில் சீன ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை. அதன் காரணமாகத்தான் அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என திபெத்தியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
 கருவில் இருக்கும் குழந்தைகளின் மரபணுவில் திருத்தம் செய்ததாக சீன விஞ்ஞானி ஹீ ஜியான்குய் என்பவர் கடந்த 2018 இறுதியில் ஓர் அறிவியல் கருத்தரங்கில் தெரிவித்தார். இத்தகவல் மருத்துவ உலகையே அதிரவைத்தது. அதன்பிறகு 2019 ஜனவரி முதல் சுமார் ஓராண்டு அவர் மாயமானார். இந்நிலையில், ரகசிய நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக சீன அரசு தெரிவித்தது.
 சீனாவின் பிரபல நடிகை ஃபான் பிங்பிங். ஃபோர்ப்ஸ் பட்டியலில் சீனாவின் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்ற இவர், 2018-இல் திடீரென மாயமானார். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக அவர் சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது அப்போது யாருக்குமே தெரியவில்லை. சில மாதங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அவர் 70 மில்லியன் டாலரை வரியாக அரசுக்கு செலுத்தினார். வெளியே வந்ததும் முதல் வேலையாக சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் தான் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக மன்னிப்பு கோரினார். அந்த வரிசையில் இப்போது இணைந்துள்ளார் ஜாக் மா.
 
 - எஸ்.ராஜாராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com