ஜிகா வைரஸ் எப்படி பரவுகிறது? ஏன் அச்சப்பட வேண்டும்?

கேரளத்தில் 24 வயது கா்ப்பிணிக்கு கொசுக்களால் பரவும் ஜிகா தீநுண்மியின் முதல் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அது 15 ஆக உயர்ந்துள்ளது.
ஜிகா வைரஸ் எப்படி பரவுகிறது? ஏன் அச்சப்பட வேண்டும்?
ஜிகா வைரஸ் எப்படி பரவுகிறது? ஏன் அச்சப்பட வேண்டும்?

கேரளத்தில் 24 வயது கா்ப்பிணிக்கு கொசுக்களால் பரவும் ஜிகா தீநுண்மியின் முதல் பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அது 15 ஆக உயர்ந்துள்ளது.

டெங்கு நோயால் ஏற்படும் காய்ச்சல், மூட்டு வலி போன்ற பாதிப்புகள் இந்த ஜிகா தீநுண்மியாலும் ஏற்படும்.

ஜிகா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட பெண் திருவனந்தபுரம் மாவட்டம், பாறசாலாவைச் சோ்ந்தவராவாா். ஜூன் 28-ஆம் தேதி காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஜூலை 7-ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில், மேலும் 15 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கரோனா பெருந்தொற்றுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஜிகா என்னும் வைரஸ் மேலும் அச்சுறுத்தலை அதிகரித்திருக்கிறது. ஏடிஎஸ் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவும்.

எப்படி பரவுகிறது ஜிகா வைரஸ்? ஏடிஎஸ் வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த கொசுக்கள் இரவு நேரங்களை விடவும், பகல் நேரத்தில்தான் மக்களைக் கடிக்கிறது. 

ஜிகா வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் என்ன? காய்ச்சல், தசை வலி, சரும பாதிப்பு, தலைவலி, மூட்டு வலி, சிவந்த கண்கள் போன்ற பொதுவான உடல் நலப் பிரச்னைகளே இந்த ஜிகா வைரஸின் அறிகுறிகளாக உள்ளன.

கொசுக்கள் கடிப்பதால் மட்டுமே பரவுமா? இல்லை. ஜிகா வைரஸ் பாதித்த கர்ப்பிணியின் மூலம், அவரது வயிற்றில் வளரும் சிசுவுக்கும் ஜிகா பரவுகிறது. ஜிகா வைரஸ் பரவியவரின் ரத்தத்தை வேறு நபர்களுக்கு செலுத்துவது, பாதுகாப்பற்ற உடலுறவு மூலமாகவும் இந்த வைரஸ் பரவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஜிகா வைரஸ் பரவி எப்போது அறிகுறிகள் தெரியவரும்? ஒரு சில நாள்கள் முதல் ஒரு வாரத்துக்குள் அறிகுறிகள் தெரியவரும். 

கரோனாவைப் போல பயங்கரமானதா ஜிகா வைரஸ்? இல்லை. ஜிகா வைரஸ் அரிதிலும் அரிதாகவே மரணத்தை விளைவிக்கும். பெரும்பாலானோருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பெரிதாக பிரச்னைகள் ஏற்படுவதில்லை.

பிறகு ஏன் ஜிகா வைரஸ் குறித்து பயப்பட வேண்டும்? ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை தாக்கும் போது, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மைக்ரோஃபாலி போன்ற பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்க நேரிடும்.

மைக்ரோஃபாலி என்றால் என்ன? மைக்ரோஃபாலி என்பது, பிறக்கும் குழந்தையின் தலையின் அளவு வழக்கமான அளவை விட சிறியதாக இருத்தல். இதற்கு, குழந்தையின் மூளைப் பகுதி போதுமான வளர்ச்சியடையாததே காரணமாகிறது.

ஜிகா வைரஸை எவ்வாறு கண்டறியலாம்? ஜிகா வைரஸின் அறிகுறிகளும், கொசுக்கள் மூலம் பரவும் நோய்களின் அறிகுறிகளும் ஒன்றுபோலவே இருக்கும். நோய் பாதித்த ஒருவரின் ரத்த அல்லது சிறுநீரக மாதிரியை ஆய்வு செய்தே ஜிகா வைரஸ் பாதிப்பை உறுதி செய்ய முடியும்.

யாரெல்லாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்? கர்ப்பிணிகளை ஜிகா வைரஸ் தாக்கினால், அவர்களது குழந்தையையும் பாதிக்கும் என்பதால், கர்ப்பிணிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஜிகா வைரஸ் வராமல் இருக்க என்ன செய்யலாம்? வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குடிக்க வேண்டும். 

எங்கெல்லாம் ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்படுகிறது? தற்போது நாட்டில் தில்லியில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திலும், புணேவிலுள்ள தேசிய நுண்ணுயிரியல் ஆய்வு மையத்திலும் பரிசோதனை செய்யப்படுகிறது.

ஜிகா வைரஸைத் தடுக்க தடுப்பூசி இருக்கிறதா? இல்லை. ஜிகா வைரஸுக்கு இதுவரை எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜிகா வைரஸைக் குணப்படுத்த மருந்துகள் உண்டா? ஜிகா வைரஸைக் குணப்படுத்த தனிப்பட்ட மருந்துகள் எதுவும் இதுவரை இல்லை.

ஜிகா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக நீர் அருந்த வேண்டும். முழு ஓய்வு தேவை. காய்ச்சல் மற்றும் உடல் வலிகளுக்கு மருந்து சாப்பிடலாம். வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

ஜிகா வைரஸ் பரவாமல் தடுப்பது எப்படி? கொசு கடிக்காமல் தடுப்பதே மிகச் சிறந்த தடுப்பு முறை. மூடிய அறையில் உறங்கலாம். கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும். வெளிப்புறங்களில் படுத்து உறங்குவதைத் தவிர்க்க வேண்டும். நீண்ட கைகளைக் கொண்ட ஆடைகள், பேன்ட் போன்றவை அணியலாம்.

ஜிகா வைரஸ் பாதித்தவர்கள் குழந்தைப் பேறை தள்ளிப்போட வேண்டுமா? ஜிகா வைரஸ் பாதித்தவர்கள், அறிகுறி தென்பட்ட நாளிலிருந்து சுமார் 3 மாதங்கள் குழந்தைப்பேற்றை தள்ளிப்போட வேண்டும். ஜிகா வைரஸ் பரவிய பகுதிகளுக்குச் சென்று வந்தவர்களும், மூன்று மாதங்களுக்கு குழந்தைப் பேற்றை தள்ளிப்போடலாம். பெண்களைப் பொறுத்தவரை ஜிகா வைரஸ் பாதித்தாலோ அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வந்தாலோ, இரண்டு மாதக் காலத்துக்குப் பிறகு குழந்தைப் பேற்றை திட்டமிடலாம்.

பெண்களை விடவும் ஆண்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது ஏன்? ஜிகா வைரஸ், உடலின் வேறு எந்த உறுப்புகளையும் விட, ஆணின் விந்தணுக்களில் அதிக நாள்கள் வாழ்வதால், ஆண்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com