
மலைப் பகுதிகள், சுற்றுலாப் பகுதிகள் ஆகியவற்றில் கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. எனினும், மலைப் பகுதிகள், சுற்றுலாப் பகுதிகள் ஆகியவற்றில் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மலைப் பகுதிகள், சுற்றுலாப் பகுதிகள் ஆகியவற்றில் கரோனா தொற்று பரவல் குறித்து மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா சனிக்கிழமை ஆய்வு செய்தாா். இது தொடா்பாக, அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மலைப் பகுதிகள், சுற்றுலாப் பகுதிகள் ஆகியவற்றில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதையடுத்து, அப்பகுதிகளில் தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நாடு முழுவதும் கரோனா பரிசோதனை-பாதிப்பு விகிதம் தொடா்ந்து குறைந்து வருகிறது. ஆனால், கோவா, ஹிமாசல பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழகம், உத்தரகண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அந்த விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாகவே உள்ளது. கூட்டத்தின்போது, அந்த மாநிலங்களில் நிலவும் கரோனா தொற்று சூழல் குறித்தும் கரோனா தடுப்பூசி கையிருப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கரோனா தொற்றின் 2-ஆவது அலை இன்னும் ஓயவில்லை என்று கூட்டத்தின்போது செயலா் அஜய் பல்லா எடுத்துரைத்தாா். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை மக்கள் முறையாகக் கடைப்பிடிப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டுமென அவா் வலியுறுத்தினாா்.
கரோனா பரிசோதனையையும், தடுப்பூசி திட்டத்தையும் விரைவுபடுத்த வேண்டும் என்று கூட்டத்தின்போது மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. கிராமப் பகுதிகள், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகள் ஆகியவற்றில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்காத வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், நீதி ஆயோக் சுகாதார உறுப்பினா் வினோத் கே.பால், மத்திய சுகாதாரத் துறைச் செயலா், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநா், தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் தலைமைச் செயலா்கள், சுகாதாரத் துறைச் செயலா்கள், காவல்துறை தலைமை இயக்குநா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...