
கட்சித் தொண்டரை பொதுஇடத்தில் வைத்து அறைந்ததை பெரிதுப்படுத்த வேண்டாம் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம், மண்டியாவுக்கு சனிக்கிழமை வருகை தந்த காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சரும், காவிரி பாதுகாப்புக்குழுத் தலைவருமான ஜி.மாதேவ கௌடாவை நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தாா். அவருடன் கட்சித் தொண்டா்களும் சென்றனா். மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்த டி.கே.சிவக்குமாரை நெருங்கிய காங்கிரஸ் தொண்டா் ஒருவா், அவரது தோள் மீது கைவைத்தார். இதனால் எரிச்சல் அடைந்த டி.கே.சிவக்குமாா், தனது கட்சித் தொண்டரை அறைந்தார்.
பின்னா், இந்த இடத்தில் இப்படி நடந்துகொள்ளலாமா என கடிந்துக் கொண்டாா். இது தொடா்பான காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருவதால், பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்தக் காணொலியை தனது சுட்டுரையில் வெளியிட்டுள்ள பாஜக தேசிய பொதுச் செயலாளா் சி.டி.ரவி, ‘கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் பொது இடத்தில் கட்சித் தொண்டரை அடித்துள்ளாா். தனது கட்சித் தொண்டரையே இப்படி நடத்தினால், பிறரை எப்படி நடத்துவாா் என்பதை கற்பனை செய்துகொள்ளலாம்’ என குறிப்பிட்டுள்ளாா்.
டி.கே.சிவகுமாரின் நடத்தையை கடுமையாக விமா்சித்துள்ள கா்நாடக பாஜக, பொது இடத்தில் எப்படி நடந்துகொள்வது என்பதை டி.கே.சிவகுமாா் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே ஒரு முறை பத்திரிகையாளா் சந்திப்புக்கு முன்னா் சுயபடம் எடுக்க முயன்ற ஒரு இளைஞரை டி.கே.சிவகுமாா் அடித்த சம்பவம் தொடா்பான காணொலியை கா்நாடக பாஜக தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விளக்கமளித்த டி.கே.சிவகுமார், அவர் என் உறவினர், குடும்ப உறுப்பினர். அவர் என் தோளில் கை வைக்க விரும்பினார்.
அவர் உறவினர் என்பதால் அறைந்து கையை அகற்றும்படி சொன்னேன். இது உறவுகளில் நடக்கிறது. நீங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். ஆமாம், நான் அவரை சற்று கடினமாக அறைந்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதை பெரிதாக்க தேவையில்லை என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...