
ராகுல் காந்தி
மத்திய அரசின் பாதுகாப்பு கொள்கையால் நாடு பலவீனப்பட்டுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்தாண்டு ஜூன் 15ஆம் தேதி, கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் இந்திய, சீன படைகளுக்கிடையே மோதல் வெடித்தது. இதில், இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதே போன்ற மோதல் சம்பவம் கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இச்செய்தியை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர், "இந்திய அரசின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையால் நம் நாடு பலவீனமடைந்துள்ளது. இந்தியா இந்தளவுக்கு பலவீனமடைந்ததே இல்லை" எனவும் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
ஆனால், இதற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்தது. கல்வான் மோதல் குறித்து வெளியாகும் செய்திகள் பொய்யானவை என்றும் ஆதாரமற்றவை என்றும் கூறியுள்ளது.
கடந்தாண்டு மே மாதம் முதல், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகளை சீனா நிலைநிறுத்திவருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக, இந்தியாவும் ராணுவ வீரர்களை குவித்துவருகிறது.
வடக்கு மற்றும் தெற்கு பாங்காங் சோ ஏரிக்கரைகளில் இருநாட்டு ராணுவமும் தங்களது படைகளை திரும்பப்பெற்றாலும், ஹாட் ஸ்பிரிங், கோக்ரா போஸ்ட், தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய, சீன நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நீடித்துவருகிறது.
கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்திய, சீன ராணுவப் படைகளுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் தங்கள் படைகளை கடந்த பிப்ரவரியில் விலக்கிக் கொண்டன.