
நாட்டில் கரோனா உறுதியாகும் விகிதம் 4.66%; மீள்வோர் 94.55%
புது தில்லி: கரோனா தொற்றின் அண்மைத் தகவல் நிம்மதி தரும் வகையில் அமைந்துள்ளது. அதாவது, நாட்டில் கரோனா உறுதியாகும் விகிதம் 4.66 சதவீதமாகச் சரிந்துள்ளது. தொற்றிலிருந்து மீள்வோர் விகிதம் 94.55 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
57 நாள்களுக்குப் பிறகு இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 13 லட்சத்திற்கும் கீழ் (12,31,415) சரிந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 72,287 பேர் குறைந்துள்ளனர்.
அன்றாட பாதிப்புகளின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக ஒரு லட்சத்திற்கும் குறைவாக ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 92,596 பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2,75,04,126 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,62,664 பேர் குணமடைந்தனர். தொடர்ந்து 27-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசியளவில் குணமடைபவர்களின் வீதம் 94.55%ஆக உயர்ந்துள்ளது. வாராந்திர தொற்று உறுதி வீதம் 5.66% ஆகும். தொடர்ந்து 16-வது நாளாக அன்றாட பாதிப்பு வீதம் 10%க்கும் குறைவாக, 4.66%ஆக உள்ளது.
இதுவரை 37.01 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 23.9 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.