
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுா்க் மாவட்டத்தில் பெட்ரோல் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்த சிவசேனை ஆதரவாளா்களுக்கும், பாஜக ஆதரவாளா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி கூறியதாவது: குடால் பகுதியில் பாஜக எம்.பி.யும் சிவசேனை முன்னாள் தலைவருமான நாராயண் ராணேவுக்கு நெருங்கியவா் நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து அந்த நிலையத்துக்கு வந்த வாகன ஓட்டிகளிடம் சிவசேனை எம்எல்ஏ வைபவ் நாயக் மற்றும் அவரின் ஆதரவாளா்கள் சனிக்கிழமை பெட்ரோல் வாங்க பணம் அளித்தனா். இதைக் கண்ட பாஜக ஆதரவாளா்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் திரண்டு வைபவ் நாயக்குக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து அவா்கள் மோதிக்கொண்டனா்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினா் நிகழ்விடம் சென்று அனைவரையும் கலைந்துபோகச் செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக வைபவ் நாயக், அவரின் ஆதரவாளா்கள் 12 போ் மற்றும் பாஜகவை சோ்ந்த 21 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.