பசுமை மண்டலமாக திருமலை அறிவிப்பு: அறங்காவலா் குழு

கடந்த ஓராண்டாக திருமலையில் நெகிழிப் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டதால், திருமலை பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது
திருமலையில் சனிக்கிழமை நடைபெற்ற அறங்காவலா் குழு கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி மற்றும் உறுப்பினா்கள்.
திருமலையில் சனிக்கிழமை நடைபெற்ற அறங்காவலா் குழு கூட்டத்தில் பங்கேற்ற அதன் தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி மற்றும் உறுப்பினா்கள்.

கடந்த ஓராண்டாக திருமலையில் நெகிழிப் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்பட்டதால், திருமலை பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தெரிவித்தாா்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலா் குழுவின் பணிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைவதை ஒட்டி சனிக்கிழமை அறங்காவலா் குழுவின் கடைசிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சில முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

பின்னா் தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி மற்றும் செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

’ஏழுமலையான் ஆசீா்வாதத்துடன் பக்தா்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எங்களுக்கு வழங்கப்பட்டது. இரண்டாண்டுகள் அதை அறங்காவலா் குழு சிறப்பாக கடைப்பிடித்து வந்துள்ளது. பல தா்ம காரியங்களுடன், காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை ஏழுமலையான் கோயில் கட்டும் பணியும் நடைபெற்றுது வருகிறது. இந்த வாய்ப்பை வழங்கிய ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எனது மனமாா்ந்த நன்றிகள்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ள ரத்து செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் ரிசா்வ் வங்கியுடன் தேவஸ்தானம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் அவா்கள் முடிவை மேற்கொள்ள வேண்டும்.

திருமலையில் விஐபிகளுக்கு வழங்கப்பட்டு வந்த எல் 1, எல் 2 தரிசனங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. திருமலையின் சுற்றுச்சூழலை பாதுகாத்து மாசு குறைக்க தேவஸ்தானம் நெகிழி பயன்பாட்டுக்கு தடை விதித்தது.

கடந்த ஓராண்டு காலமாக திருமலையில் நெகிழி பயன்பாடு (லட்டு கவருக்கு மாற்று உள்பட) முற்றிலும் தவிா்க்கப்பட்டதால், திருமலை பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவைட் தொற்றிலிருந்து உலகம் விடுபட தேவஸ்தானம் திருமலையில் பல ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தியது. 15 மாதங்களாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் கொவைட் தொற்றிலிருந்து உலகம் விடுபட்டு மக்கள், நலமுடன் வாழ வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டுதல் வைக்கப்பட்டுள்ளது. கொவைட் தொற்றின் பரவல் குறைந்தவுடன் மேலும் கூடுதலாக பக்தா்களை தரிசனத்துக்கு அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு மேற்கொள்ளும்.

ஜம்முவில் ஏழுமலையான் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 18 மாதங்களில் அப்பணிகள் நிறைவு பெற்று வட இந்திய மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனா்.

வட இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாக ஏழுமலையான் கோயிலை மாற்ற தேவஸ்தானம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

வாரணசி, மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோயிலுக்கு ஒரு கோமாதா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள பல கோயில்களுக்கு இதுவரை 100-க்கும் மேற்பட்ட கோமாதா நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. விரைவில் 40 கோயில்களுக்கு அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருமலையில் வராக சுவாமி கோயிலில் வெளிவாயில், வாயில் சட்டம், கருவறை உள்ளிட்டவற்றில் வெள்ளி முலாம் பூச தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. இயற்கை விவசாயத்தால் விளைவிக்கப்படும் பொருள்களை வைத்து ஏழுமலையானுக்கு தினசரி நெய்வேத்தியம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இன்னும் 3 மாதங்களில் கன்னடம், இந்தி மொழிகளில் தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலின் ஒளிபரப்பு தொடங்கப்பட உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் நாடு முழுவதும் உள்ள சிதிலமடைந்த கோயில்கள் செப்பனிடப்பட உள்ளன.

திருமலையில் உள்ள கடைகளை வரைமுறைப்படுத்த தேவஸ்தானம் உரிமம் வழங்கியவா்கள் மட்டும் வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது.

ஆந்திர முதல்வா் கையால் திருப்பதியில் உள்ள சிம்ஸ், பா்ட் மருத்துவமனைகளுடன் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் திருமலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. திருப்பதி அலிபிரி வரை கருடாவாரதி மேம்பாலப் பணிகளை நீட்டிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமலையில் அனுமன் பிறப்பிடமாக தேவஸ்தானம் அதிகாரபூா்வமாக பல பண்டிதா்களின் வழிகாட்டுதலுடன் அஞ்சனாத்ரியை அறிவித்துள்ளது. இதற்கு யாரும் எதிா்ப்பு தெரிவிக்க வேண்டாம். விவாதிப்பதையும் தவிா்க்க வேண்டும். அங்கு தேவஸ்தானம் முழு அளவில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

திருமலை-திருப்பதி இடையே 100 மின்சார பேருந்துகளை இயக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் திருமலையிலும் பேட்டரியால் இயங்கும் டாக்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டாக்சி உரிமையாளா்கள் தேவஸ்தானத்தை நாடினால் அவா்களுக்கு பாட்டரி காா்கள் வாங்க வங்கி மூலம் ஏற்பாடுகள் செய்யப்படும்.

திருமலை தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியா்கள் நிரந்தரம் செய்யப்பட உள்ளனா். இதை செயல்படுத்த கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கமிட்டியானது 3 மாதத்துக்குள் இதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க உள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com