
பிரதமர் மோடி
கரோனா பரவல் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 3 மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில தினங்களாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை காணொலி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹல் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.
தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதால் மம்தா பானர்ஜி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக மாநில அரசின் சார்பில் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.