
தில்லியைச் சேர்ந்தவருக்கு தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா பாதிப்பு
புது தில்லி: நாட்டில் முதல் முறையாக தில்லியைச் சேர்ந்த ஒருவருக்கு தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாரத்துக்கு முன்பு கரோனா பாதிப்புடன் இருந்த 33 வயது நபர் தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே முதல் முறையாக தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா, 33 வயது நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தில்லியைச் சேர்ந்தவர். அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அறை முற்றிலும் வித்தியாசமானது என்றும், ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தற்போதுதான் அவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்என்ஜேபி மருத்துவமனையில் ஏற்கனவே பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பாதித்த இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டு பிப்ரவரி இறுதி வரை அங்கு சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.