'கரோனா சோர்வு' தான் இரண்டாம் அலை எழக் காரணம்: நிபுணர்கள்

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஒட்டுமொத்த உலக நாடுகளுமே கரோனா.. கரோனா என்ற அச்சத்துடன், கிருமிநாசினியிடம் சரணடையத் தயாராகிக் கொண்டிருந்தது.
'கரோனா சோர்வு' தான் இரண்டாம் அலை எழக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்
'கரோனா சோர்வு' தான் இரண்டாம் அலை எழக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்


சென்னை: கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஒட்டுமொத்த உலக நாடுகளுமே கரோனா.. கரோனா என்ற அச்சத்துடன், கிருமிநாசினியிடம் சரணடையத் தயாராகிக் கொண்டிருந்தது.

ஆனால், அதை விட அதிவேகத்தில் தற்போது கரோனா பெருந்தொற்று பரவி வந்தாலும், யார் முகத்திலும் அச்சமோ அதை மறைக்கும் முகக்கவசமோ இல்லை. காரணம்.. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். மக்களின் கவனக்குறைவு, மத்திய, மாநில அரசுகளின் கவனக்குறைவு என பட்டியலிட்டுக் கொண்டேப் போகலாம்.

ஏன் இப்படி மாறிப்போனோம்.. யாரைப் பார்த்தாலும் கரோனாவைப் பார்ப்பது போலவே பயந்தோமே.. அந்த பயம் எங்குப் போனது, எதைத் தொட்டாலும் தீயைத் தொட்டது போல உணர்ந்தோமே.. அந்த அச்சம் என்ன ஆனது? காரணம் இதுதானாம்.. "கரோனா சோர்வு"

நன்கு தெரிந்தவரைக் கூட முகக் கவசத்தால் தெரியாமல் கடந்து போய்க்கொண்டிருந்த நிலை தற்போதில்லை. பலரிடம் கிருமிநாசினி இல்லை, கிருமிநாசினியைப் பயன்படுத்தி பல நாள்கள், வாரங்கள் ஆகிறது என்ற நிலைதான். காரணம் கரோனா சோர்வு. எப்போதுமே முகக்கவசம் அணிந்து கொண்டு, கையை கிருமிநாசினி போட்டுத் தூய்மை செய்து கொண்டே இருந்தது, காய்கறி, பழங்கள், கீரைகளைக் கூட அலசி அலசி மக்கள் ஓய்ந்துவிட்டார்கள்.

எந்த அச்சமும், கவலையும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான். பிறகு வரட்டும் பார்க்கலாம் என்ற அல்லது வராது என்ற மனநிலை உறுதியாகிவிடுகிறது. அதைத்தான் கரோனா சோர்வு என்கிறார்கள் நிபுணர்கள்.

மக்கள் மட்டுமா.. மத்திய, மாநில அரசுகளும் எத்தனையோ கெடுபிடிகளை தற்போது தளர்த்திவிடவில்லையா.. முற்றிலும் குறையும் வரை குறைந்தபட்ச கட்டுப்பாடுகளையாவது கைக்கொண்டிருக்க வேண்டாமா? 

எதிரில் யாராவது வந்தால், கரோனாவே கால் முளைத்து நடந்து வருவதைப் போல ஒதுங்கிச் சென்றவர்கள் தற்போது  மோதிப் பார்க்கலாம் வா என்ற பாணியில் அல்லவா எதிர்படும் நபர்களைக் கடந்து செல்கிறார்கள். இவை அனைத்தும் கரோனா கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட சோர்வு என்கிறார்கள் சுகாதாரத் துறை நிபுணர்கள்.

மக்களிடையே ஏற்பட்ட கரோனா சோர்வுதான் இரண்டாம் அலை எழக் காரணம் என்று தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவுக்கு வந்துள்ளனர். ஒரு ஆண்டு காலமாக, களப்பணியாற்றி வரும் தொழிலாளர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து சுகாதாரப் பணியாளர் ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்று தொடங்கிய போது, யாராவது முகக்கவசம் அணியாமல் இருந்தால் அவர்களிடம் முகக்கவசம் அணியுங்கள் என்று சொன்னால் உடனடியாக அணிந்து கொள்வார்கள். இப்போது யாரிடமாவது அப்படிச் சொன்னால், 'பகல் முழுக்க கொளுத்தும் வெயிலில் முகக்கவசம் அணிந்து கொண்டு இங்கே நின்று பாருங்கள்' என்று பதிலளிக்கிறார்கள் என்கிறார்.

ஆரம்பத்தில் கரோனா தொற்றின் மீதான அச்சம் தற்போது இல்லை. கரோனா அறிகுறிகள் தென்பட்டாலும் பரிசோதனை செய்து கொள்ள தாமதம் செய்கிறார்கள். இதனால்தான் தற்போது ஒரு வீட்டில், ஒரு பகுதியில் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்படும் நிலை காணப்படுகிறது என்கிறார்கள் சுகாதாரத் துறை ஊழியர்கள்.

எனவே, கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக பொதுமக்கள் இதுவரை பின்பற்றி வந்த சில முக்கிய பழக்க வழக்கங்களை இப்போது மீண்டும் தொடர வேண்டியது கட்டாயம் மட்டுமல்ல, அதனை தங்களது வாழ்க்கை முறையின் வழக்கமாகவே கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள் நிபுணர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com