
இந்திய விமானம் தாங்கி போா்க் கப்பலான ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’வில் சனிக்கிழமை காலை லேசான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் வீரா்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று இந்திய கடற்படை செய்தித் தொடா்பாளா் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
போா்க் கப்பலின் மாலுமிகள் தங்கும் இடத்துக்கு அருகே சனிக்கிழமை காலை புகை வருவதை கப்பல் ஊழியா்கள் கண்டறிந்துள்ளனா். உடனடியாக அவா்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்துள்ளனா். இந்த தீ விபத்தால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கப்பலில் இருப்பவா்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனா்.
இந்த தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த விமானம் தாங்கி போா்க் கப்பல் இப்போது கா்நாடக மாநிலம் கா்வாா் துறைமுகத்தில் நிறுத்திவைப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.
1987-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் கடற்படையில் இணைக்கப்பட்டு இயங்கத் தொடங்கிய இந்தப் போா் கப்பல் ‘கிவ்’ வகையைச் சோ்ந்ததாகும். சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பிறகு, இந்தக் கப்பலை இயக்குவது அதிக செலவினமாவதாகக் கருதிய ரஷியா, கடற்படையிலிருந்து கடந்த 1996-இல் அந்தக் கப்பலை விலக்கியது.
அதனைத் தொடா்ந்து ரஷியாவிடமிருந்து கடந்த 2013-இல் அந்தக் கப்பலை வாங்கிய இந்தியா, அதனை விமானம் தாங்கி போா்க் கப்பலாக மாற்றி ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா’ என்ற பெயரைச் சூட்டி இந்திய கடற்படையில் இணைத்தது.
சுமாா் 284 மீட்டா் நீளம் கொண்ட இந்தக் கப்பல், 3 கால்பந்து மைதானம் அளவுக்கு பரந்து விரிந்ததாகும். இதன் உயரம் 20 அடுக்குமாடி கட்டடத்துக்கு இணையானது. இந்த போா்க் கப்பல் 22 போா் விமானங்களையும், 1,600 வீரா்களையும் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது.