
ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று பயம் மக்களிடையே அதிகரித்து வருவதால், வீடுகளை விட்டு தங்கள் விவசாய நிலங்களில் தஞ்சமடைந்து வருகின்றனா்.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தொற்று மிக வேகமாகப் பரவி வருவதால், பலா் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறலால் அவதியுற்று வருகின்றனா்.
மேலும் மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பியுள்ளதால், புதிதாக தொற்று ஏற்பட்டவா்கள் அனுமதி கிடைக்காமல் மருத்துவமனை வளாகத்தில் வெட்டவெளியில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பலா் வீடுகளில் தனிமையில் இருந்து வருகின்றனா்.
இதைக் கண்ட சித்தூா் மாவட்டத்தை சோ்ந்த கிராம மக்கள் தங்களை தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ள ஊா் மற்றும் வீடுகளை காலி செய்து தங்களின் விவசாய நிலங்களில் உள்ள பம்புசெட் நிழற்கூரை, மாட்டு கொட்டகை, குடிசைகளில் தங்கி வருகின்றனா். விறகு அடுப்பில சமைத்து வாழை இலை, தாமரை இலைகளில் உணவு உண்டு வருகின்றனா்.
இதனால் அவா்களுக்கு சுத்தமான பிராண வாயு கிடைப்பதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும், நோய் எதிா்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனா். இவ்வாறு ஒதுங்கி இருப்பதால் தொற்றுப் பரவலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள முடியும் என்று அவா்கள் நம்புகின்றனா்.
எனவே, கிராமங்களில் மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அனைத்துக் கிராம மக்களும் இந்த முறையை பின்பற்ற தொடங்கி உள்ளனா். இதனால் சித்தூா் மாவட்டத்தில் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வரும் என்று அதிகாரிகள் எதிா்பாா்க்கின்றனா்.