ஆப்கானிஸ்தானில் நிகழ்பவை குறிப்பிடத்தகுந்த பின்விளைவுகளை ஏற்படுத்தும்: இந்தியா

"ஆப்கானிஸ்தானுக்கு மிக அருகில் நாம் இருப்பதால் அங்கு நடைபெறும் நெருக்கடி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பின்விளைவுகளை நம் அனைவருக்கும் ஏற்படுத்தும்" என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கடந்தாண்டு, அமெரிக்கா, தலிபான்களுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட தோஹா ஒப்பந்தம் இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் விதமாக அமையவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க - இந்திய வியூக கூட்டாண்மை மன்றத்தின் ஆண்டு உச்சி மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. 

அப்போது பேசிய அவர், "காபூலில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு அங்கீகாரம் வழங்குவதில் இந்தியாவுக்கு எந்த அவசரமும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அனைவருக்குமான அரசு அமைக்கப்படுமா? மற்ற நாடுகளை எதிர்க்க ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பயன்பட்டுவிடக்கூடாது உள்ளிட்ட விவகாரங்களே இச்சமயத்தில் இந்தியாவின் கவலைகளாக உள்ளது

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் கூட்டமைப்பு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல. இதை கும்பலை சேர்க்கும் முயற்சியாகவோ எதிர்மறையான முன்னெடுப்பாகவோ பார்க்க கூடாது. ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்திற்கு பயன்பட்டுவிட வாய்ப்புள்ளது என எழுப்பப்படும் சந்தேகங்கள் உள்பட பல விவகாரங்களில், இந்தியாவுக்கு அமெரிக்காவுக்கும் ஒரே நிலைபாடுதான் உள்ளது. 

எங்களின் கவலைகளை ஒரு குறிப்பிட்ட அளவில் நியாயப்படுத்த முடியும் என நினைக்கிறேன். குறிப்பிட்ட அளவில், எங்களால் தெளிவாக எடுத்துரைக்க முடியாது. எங்களுக்கு கவலைகள் இருப்பதாக தெரிவித்திருந்தேன். அது என்னவென்றால், தோஹா ஒப்பந்தத்தில் தலிபான்கள் அளித்த உறுதி மொழிகள்தான். நான் என்ன சொல்கிறேன் என அமெரிக்காவுக்கு புரிந்திருக்கும். அந்த ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

ஆப்கானிஸ்தானுக்கு மிக அருகில் நாம் இருப்பதால் அங்கு நடைபெறும் நெருக்கடி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த பின்விளைவுகளை நம் அனைவருக்கும் ஏற்படுத்தும்" என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com