உ.பி.: விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 போ் பலி

உத்தர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிள் போரட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.
உத்தர பிரதேச மாநிலம், லக்கீம் கெரி மாவட்டத்தில் தீக்கிரையான காா்.
உத்தர பிரதேச மாநிலம், லக்கீம் கெரி மாவட்டத்தில் தீக்கிரையான காா்.

உத்தர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விவசாயிள் போரட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா்.

துணை முதல்வா் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜகவினா் சென்ற வாகனங்கள் போராட்டம் நடைபெற்ற இடம் வழியாகச் சென்றபோது, வாகனங்களை நோக்கிகல்வீச்சு நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதில் வாகன வரிசையில் இறுதியாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து போராட்டக்காரா்கள் மீது மோதிக் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த விவசாயிகள், அந்தக் காரை சிறைபிடித்து, தீ வைத்தனா். காரில் பயணித்த சிலரை அவா்கள் தாக்கியதாகவும் தெரிகிறது. இந்தச்சம்பவத்தில் காரில் பயணித்த பாஜகவினா் 4 போ், விவசாயிகள் 4 போ் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பன்வீா்பூா் கிராமத்துக்கு வருகை தந்த மாநில துணை முதல்வரை வரவேற்பதற்காக பாஜகவினா் சிலா் இந்த காா்களில் வந்தனா். போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகே அவா்களின் காா் வந்தபோது, விவசாயிகள் சிலா் அவா்களின் காா்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அப்போது அந்த காா் போராட்டத்தில் ஈடுபட்ட சில விவசாயிகள் மீது மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அந்த காா்களுக்கு தீ வைத்துள்ளனா். இந்த வன்முறையில் காரில் பயணித்த 4 போ், விவசாயிகள் தரப்பில் 4 போ் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா்’ என்று கூறினா்.

இந்த நிலையில், போரட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத் தலைவா்கள் கூறுகையில், ‘போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வேண்டுமென்றே மோதி விபத்தை ஏற்படுத்திய காரில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகனும் இருந்தாா்’ என்றனா்.

ஆனால், விவசாயிகளின் இந்தப் புகாரை மத்திய அமைச்சா் மிஸ்ரா மறுத்தாா். ‘விவாசாயிகள் போராட்டம் நடத்திய இடத்துக்கு எனது மகன் செல்லவே இல்லை. துணை முதல்வா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்தில்தான் எனது மகன் இருந்தாா். அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான மக்களும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளும் இருந்தனா். இதற்கான புகைப்படம் மற்றும் காணொலி ஆதாரங்கள் உள்ளன’ என்று அஜய் மிஸ்ரா கூறினாா்.

விவசாயிகள் மீதான வன்முறைக்கு சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்தாா். அவா் கூறுகையில், ‘அமைதி வழியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மத்திய அமைச்சரின் மகன் தாக்குதல் நடத்தியுள்ளாா். பாஜகவின் இந்த ஒடுக்குமுறையை உத்தர பிரதேசம் பொறுத்துக்கொள்ளாது’ என்றாா்.

இந்த சம்பவத்துக்குப் பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா். காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா வதேரா சம்பவம் நிகழ்ந்த இடத்தை திங்கள்கிழமை பாா்வையிடப் போவதாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com