லக்கிம்பூர் வன்முறையால் உ.பி. தேர்தலில் பாஜக பாதிக்கப்படும்?

லக்கிம்பூர் வன்முறை 2022-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் பொதுத் தேர்தலில் தேராய் பகுதியில் பாஜகவை வீழ்த்தும் ஆயுதமாக மாறியிருக்கிறது
உ.பி: லக்கிம்பூர் வன்முறை பாஜகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
உ.பி: லக்கிம்பூர் வன்முறை பாஜகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

லக்கிம்பூர் வன்முறை காரணமாக உத்தரப் பிரதேசத்தில் 2022-ஆம் ஆண்டு நடைபெறும்  சட்டப்பேரவைத் தேர்தலில் தேராய் பகுதியில் பாஜகவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேராய் பகுதியான மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான லக்கிம்பூர்  கெரி முழுக்க கரும்பு விவசாயத்தையே நம்பியிருக்கிறது. அங்கிருக்கும் விவசாயிகளில் அதிக அளவு சீக்கியர்களே வசித்து வருகிறார்கள். கடந்த 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காவி எழுச்சியின் மூலம் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் பாஜகவினரே வென்றனர். இதற்கு முன் 2012 பொதுத் தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றிருந்தனர்.

சீக்கியர்களைத் தவிர்த்து அப்பகுதியில் பெரும்பான்மையினராக பிராமணர்களுக்குள் இருக்கும் உயர் சாதியினர் , பொதுப் பிரிவு மற்றும் இஸ்லாமியர்களில் இருக்கும் குர்மி சாதியினர் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்-3) வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்  4 விவசாயிகள் உள்பட 9 பேர் இறந்ததால் மிகப் பெரிய பிரச்னையாக உருவானதும்  லக்கிம்பூர் வன்முறையை எதிர்கட்சிகள் கையில் எடுத்ததும் ஆளும் பாஜகவிற்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கியமாக இப்பிரச்னையின் தீவிரம் 2022- தேர்தலில் எதிரொலிக்கும் அபாயம்  இருப்பதால் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தைச் சுற்றி இருக்கும் பிலிபித், ஷாஜகான்பூர், ஹார்தோய், சீதாப்பூர் மற்றும் பாஹ்ராய்ச் போன்ற மாவட்டங்களும் பாஜகவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

கடந்த தேர்தலில் இந்த 6 மாவட்டங்களில் உள்ள 48 தொகுதிகளில் 37 இடங்களை பாஜக கைப்பற்றியிருக்கிறது.

மேலும் “ லக்கிம்பூர் கலவரம் கண்டிப்பாக உத்தரப் பிரதேச தேர்தலில் வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதால் எதிர்க் கட்சியினர் இப்பிரச்னையை நீர்த்துப் போகவிட மாட்டார்கள்’ என அரசியல் ஆய்வாளர் ஏகே மிஸ்ரா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர், ‘உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு பாஜக நிறைய நன்மைகளை செய்திருக்கிறது. இப்போது லக்கிம்பூர் வன்முறையில் எழும் பிரச்னையையும் வெற்றிகரமாக மாநில அரசு கட்டுப்படுத்தும் என்கிற நம்பிக்கை இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு சாமாஜ்வாதியும் காங்கிரஸும் கூட்டணியில் இருந்தபோது தேராய் பகுதியில் சாமாஜ்வாதி 4 இடங்களை பெற்றிருந்தாலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

தற்போது லக்கிம்பூர் கலவரத்திற்கு காரணமாகக் கருதப்படும் அஜய் மிஸ்ரா கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் லக்கிம்பூர் கேரியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2007-ல் ஒருமுறை தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் லக்கிம்பூர் தொகுதியில் 2012 ஆண்டு வைத்திருந்த வாக்கு சதவீதத்தை விட அதிகமாக 2017 தேர்தலில் பாஜகவினர் பெற்றிருக்கிறார்கள். வரும் பேரவைத் தேர்தலில் லக்கிம்பூர் வன்முறை பாஜகவைத் திணறடிக்கும் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com