பாம்பை ஏவி மாமியார் கொலை: குற்றவாளிக்கு ஜாமீன் தர மறுத்த உச்ச நீதிமன்றம்

விஷமுள்ள பாம்பை வாங்கி வந்து மாமியாரைக் கொன்ற குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பாம்பை ஏவி மாமியார் கொலை: குற்றவாளிக்கு ஜாமீன் தர மறுத்த உச்ச நீதிமன்றம்
பாம்பை ஏவி மாமியார் கொலை: குற்றவாளிக்கு ஜாமீன் தர மறுத்த உச்ச நீதிமன்றம்

புது தில்லி: விஷமுள்ள பாம்பை வாங்கி வந்து மாமியாரைக் கொன்ற குற்றவாளிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, ராஜஸ்தானில் நடந்த இந்த கொலைச் சம்பவத்தில் கைதான குற்றவாளிகளின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, நீதபிதி சூர்ய காந்த் கூறுகையில், பாம்பாட்டிகளிடமிருந்து விஷமுள்ள பாம்புகளை வாங்கி வந்து அதைக் கடிக்க வைத்து கொலை செய்வது தற்போது வழக்கமாகி வருகிறது. அதுவும் ராஜஸ்தானில் இது அதிகமாக நடக்கிறது என்றார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிருஷ்ண குமாரின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த சம்பவத்தில் கிருஷ்ண குமாருக்கு நேரடியாக தொடர்பில்லை. தனது பெண் தோழி, எதற்காக விஷமுள்ள பாம்பை வாங்கினார் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. மருத்துவக் காரணத்துக்காக வாங்குகிறார் என்று நினைத்திருந்தார். அவர் பொறியியல் மாணவர். அவரது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு வாதிட்டார். ஆனால், கிருஷ்ண குமார்தான், பாம்பாட்டியிடம் சென்று ரூ.10 ஆயிரம் கொடுத்து விஷமுள்ள பாம்பை வாங்கி வந்துள்ளார் என்பது குற்றச்சாட்டு.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், தனது மாமியாரை, விஷம் கொண்ட பாம்பை வாங்கி வந்து கடிக்க வைத்துக் கொன்ற மருமகள் பற்றிய செய்தி கடந்த 2019ஆம் ஆண்டு ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறியது. 

ஜெய்ப்பூரைச் சேர்ந்த அல்பனா, தனது மாமியார் சுபோத் தேவியுடன் வசித்து வந்துள்ளார். அல்பனாவின் கணவர் மற்றும் கணவரின் தம்பி ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். எனவே, அவர்கள் எப்போதாவது தான் வீட்டுக்கு வருவார்கள். மாமனாரும் பணி நிமித்தமாக வெளியில் தங்கியிருந்தார். இந்த நிலையில், அல்பனாவுக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த மணீஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. எப்போதும் அவருடன் செல்லிடப்பேசியில் பேசுவதை, மாமியார் கண்டித்ததால், அவரை விஷமுள்ள பாம்பை வாங்கி வந்து, கடிக்க வைத்துக் கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, 2019 ஜூன் 2ஆம் தேதி, சுபோத் தேவி பாம்பு கடித்து கொல்லப்பட்டார். இது குறித்து ஒன்றரை மாதம் குழித்து அவரது மாமனாருக்கு சந்தேகம் வர, சில சாட்சிகளோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அது மட்டுமல்லாமல், அல்பனா மற்றும் மணீஷின் செல்லிடப்பேசி எண்களையும் காவல்துறையிடம் அளித்தனர். சம்பவம் நடந்த ஜூன் 2ஆம் தேதி அல்பனா 124 முறை மணீஷை தொடர்பு கொண்டுள்ளார். அதுபோல, மணீஷ் 19 முறை அல்பனா மற்றும் கிருஷ்ணகுமாரை அழைத்துள்ளார். இந்த சம்பவத்தில் அல்பனா, மணீஷ் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ண குமார் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டு, 2020 ஜனவரி 4ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அன்று முதல் மூவரும் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com