லக்கீம்பூர்: ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது- யோகி ஆதித்யநாத்

லக்கீம்பூர் - கெரி சம்பவத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலளித்துள்ளார்.
லக்கீம்பூர்: ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது- யோகி ஆதித்யநாத்
லக்கீம்பூர்: ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்ய இயலாது- யோகி ஆதித்யநாத்
Published on
Updated on
2 min read

அழுத்தம் கொடுப்பதற்காக, ஒருவர் மீது நடவடிக்கை எடுப்பது என்பது நியாயமாகாது என்று, லக்கீம்பூர் - கெரி சம்பவத்தில், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனை கைது செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலளித்துள்ளார்.

4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலியாவதற்குக் காரணமாக இருந்த லக்கீம்பூர் சம்பவம் துரதிருஷ்டவசமானது, இந்த விவகாரத்தில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், "ஜனநாயகத்தில் வன்முறைக்கே இடமில்லை, ஒவ்வொருவரையும் பாதுகாப்பது என்று சட்டம் உறுதியளித்திருக்கும் போது, ஒருவரது கையில் சட்டத்தை எடுப்பது என்பது சரியாக இருக்காது, அது யாராக இருந்தாலும்" என்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரியில் நிகழ்ந்த உயிரிழப்புகள் துரதிருஷ்டவசமானவை என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) தொடா்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநில அரசுக்கு நேற்று உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தர பிரதேசத்தின் லக்கீம்பூா் கெரி பகுதியில் விவசாயிகள் கடந்த 3-ஆம் தேதி நடத்திய பேரணியில் காா் மோதியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளா் உயிரிழந்தனா். அதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தாக்கியதில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் காா் ஓட்டுநா், 2 பாஜக தொண்டா்கள் உயிரிழந்தனா். சம்பவத்தின்போது சென்ற காரில் அமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினா்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இரு வழக்குரைஞா்கள் உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதியிருந்தனா். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோா் கொண்ட அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த சம்பவத்தில் உத்தர பிரதேச அரசு முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும், முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும் புகாா் வந்துள்ளது. விவசாயிகள், ஒரு பத்திரிகையாளா் உள்பட எட்டு போ் உயிரிழந்திருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை. இது தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் யாா் மீது எல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, அவா்கள் கைது செய்யப்பட்டுள்ளாா்களா இல்லையா என்ற தகவல்களை வெள்ளிக்கிழமைக்குள் (அக். 8) மாநில அரசு நிலை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்றனா்.

சிறப்பு விசாரணைக் குழு: உத்தர பிரதேச அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கரீமா பிரசாத் கூறுகையில், ‘இந்த சம்பவம் தொடா்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவும், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா். அதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முன்னதாக, ‘இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பாக எங்களுக்கு எழுதிய கடிதத்தைப் பொதுநல மனுவாக இரு வழக்குரைஞா்கள் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

விசாரணை ஆணையம்: உ.பி. அரசு

நான்கு விவசாயிகள் உள்பட எட்டு போ் உயிரிழந்த லக்கீம்பூா் கெரி சம்பவம் தொடா்பாக முழுமையான விசாரணை நடத்த ஓய்வு பெற்ற அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமாா் ஸ்ரீவாஸ்தவா தலைமையில் ஒரு நபா் ஆணையத்தை உத்தர பிரதேச அரசு வியாழக்கிழமை அமைத்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு மாநில அரசு இதை அமைத்தது.

இந்த ஆணையம் அக்டோபா் 3-ஆம் தேதி லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் உள்ள டிகோனியா - பன்பீா்பூா் சாலையில் விவசாயிகள் மீது வாகனம் மோதியது, வாகனத்துக்கு விவசாயிகள் தீவைத்து எரித்தது உள்ளிட்ட அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தி இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா எதிா்ப்பு: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதற்கு காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். உச்சநீதிமன்றம் அல்லது உயா்நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதி தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய அமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா பதவி நீக்கம் செய்யப்படும் வரையும், அவரது மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்படும் வரையும் தனது போராட்டம் தொடரும் என்று அவா் கூறினாா்.

பதவியில் இருப்பவா்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா பதவியில் தொடா்வதன் மூலம் மத்திய அரசு காண்பிக்கிறது என்றாா் பிரியங்கா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com