காங்கிரஸ் கட்சியை மீட்டெடுப்பாரா புதிய தலைவர்? தேதி குறித்த கட்சி தலைமை

சமகால அரசியல் சூழல், அடுத்த வரவுள்ள தேர்தல், உள்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும், சமகால அரசியல் சூழல், அடுத்த வரவுள்ள தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்டோபர் 16ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு தில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. சமகால அரசியல் சூழல், அடுத்த வரவுள்ள தேர்தல், உள்கட்சி தேர்தல் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

கடந்த மாதம், பஞ்சாபில் அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் அம்மாநில முதல்வர் அமரீந்தர் பதவி விலகினார். பின்னர், அப்பொறுப்பு சரண்ஜீத் சிங் சன்னிக்கு வழங்கப்பட்டதில், அம்மாநிலத்தின் முதல் தலித் முதலமைச்சராக சன்னி பொறுப்பேற்று கொண்டார். அப்போது பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, காங்கிரஸ் செயற்குழு விரைவில் நடைபெறும் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மத்தியில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கட்சி தலைமைக்கு எழுதிய கடிதத்தில், "காங்கிரசில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லை. யார் முடிவுகளை எடுக்கிறார்கள்? கட்சியில் யார் முடிவுகளை எடுப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் ஜி - 23 குழுவை (அதிருப்தி குழு) சேர்ந்தவர்கள். என்ன சொன்னாலும் தலைமையை ஆட்ட மாட்டோம். பிரச்னை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம்" என குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, கபில் சிபல் வீட்டின் முன்பு குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள், 'விரைவில் குணம் அடைய வேண்டும்' என எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தக்காளிகளை எரிந்து அவரின் காரை சேதப்படுத்தினர்.

இந்த போராட்டத்திற்கு 'ஜி - 23' குழு தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். முன்னதாக, கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளக் கோரி அதிருப்தி குழு தலைவர்கள் சோனியா காந்திக்கு கடந்தாண்டு கடிதம் எழுதினர். காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடைந்துவருவதாக தொடர் விமரிசனங்களை அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

அடுத்தாண்டு, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனிடையே, லக்கிம்பூர் சம்பவத்தை முன்வைத்து காங்கிரஸ் பாஜகவை கடுமையாக விமரிசித்துவருகிறது. குறிப்பாக, பிரியங்கா காந்தி களத்தில் இறங்கி போராடிவருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com