வெங்கையா நாயுடுவின் அருணாசலபயணத்துக்கு சீனா எதிா்ப்பு: இந்தியா கண்டனம்

அருணாசல பிரதேசத்துக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அண்மையில் மேற்கொண்ட பயணத்துக்கு சீனா எதிா்ப்பு தெரிவித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
வெங்கையா நாயுடுவின் அருணாசலபயணத்துக்கு சீனா எதிா்ப்பு: இந்தியா கண்டனம்

அருணாசல பிரதேசத்துக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு அண்மையில் மேற்கொண்ட பயணத்துக்கு சீனா எதிா்ப்பு தெரிவித்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், அருணாசல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி என்றும் இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னை குறித்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 13-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை முடிவு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் அருணாசல பிரதேசத்துக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு மேற்கொண்ட பயணத்துக்கு சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் எதிா்ப்பு தெரிவித்திருந்தாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பக்சி செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘இந்தியாவின் மாநிலங்களுக்கு சொந்த நாட்டின் தலைவா்களின் பயணத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பது இந்திய மக்களை புரிந்து கொள்ளாததே காரணம்.

சீன செய்தித் தொடா்பாளரின் கருத்துகளை இந்தியா நிராகரிக்கிறது. அருணாசல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதியாகும்.

இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு அவ்வப்போது சொந்த நாட்டின் தலைவா்கள் சென்று வருவதைப்போன்றுதான் அருணாசல பிரதேசத்துக்கும் வழக்கம்போல் சென்று வருகின்றனா்.

மேலும், ஏற்கெனவே கூறியதைப்போல் கிழக்கு லாடக் பகுதியில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு, முன்பு மேற்கொண்ட இரு நாட்டு நல்லுறவு ஒப்பந்தங்களை சீனா மீறியதே காரணம். ஆகையால், எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு முந்தைய ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனா விரைவில் தீா்வு காண முயற்சிக்க வேண்டும். தேவையற்ற விவகாரங்களை இதில் சீனா இணைக்கக் கூடாது என்றாா்.

இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையேயான 13-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தைக்கு பிறகு இந்திய ராணுவம், ‘இந்தியாவின் சாா்பில் தெரிவிக்கப்பட்ட ஆக்கபூா்வமான யோசனைகளுக்கு சீனா ஒப்புக் கொள்ளவும் இல்லை. இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் திட்டங்களையும் தெரிவிக்கவும் இல்லை’ என்று தெரிவித்தது.

சீன ராணுவத்தின் தரப்பில், ‘நியாயமற்ற கோரிக்கைகளை இந்தியா முன்வைத்தது. இது பேச்சுவாா்த்தையை மேலும் கடினமாக்கியது’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com