கொலை வழக்கு: ஆசிரமத் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஆயுள் தண்டனை

தேரா சச்சா சௌதா ஆசிரமத் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளித்தது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


தேரா சச்சா சௌதா ஆசிரமத்தின் முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொல்லப்பட்ட வழக்கில், அந்த ஆசிரமத்தின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளித்தது. 

மேலும் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ரூ. 31 லட்சமும், மற்ற குற்றவாளிகளுக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங், கிருஷ்ணன் லால், ஜஸ்பீர் சிங், அவதார் சிங், சப்கில் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் ஏற்கெனவே கடந்த 8-ம் தேதி தீர்ப்பளித்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கடந்தாண்டு இறந்துவிட்டார். தண்டனை விவரங்கள் மட்டும் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.

வழக்கு விவரம்:

ஹரியாணா மாநிலம், சிர்சாவில் உள்ள தேரா சச்சா சௌதா ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக அரசின் முக்கியத் துறைகளுக்குக் கடிதம் வந்தது. அந்தக் கடிதங்களை அனுப்புவதில் உடந்தையாக இருந்ததாக முன்னாள் மேலாளா் ரஞ்சித் சிங் மீது குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு சந்தேகம் எழுந்தது. இந்தச் சூழலில் கடந்த 2002-இல் ரஞ்சித் சிங் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். தன்னைப் பற்றிய விவரங்களை ரஞ்சித் சிங் கசியவிட்டதால், அவரைக் கொல்வதற்கு குர்மீத் ராம் ரஹீம் சிங் சதித் திட்டம் தீட்டினார் என்று சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருந்தது.

குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு இது இரண்டாவது ஆயுள் தண்டனை:

ஏற்கெனவே, 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு கடந்த 2017-இல் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ரோட்டக்கில் உள்ள சுனாரியா சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

இதுதவிர, ராம் சந்தர் சத்திரபதி என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 2 ஆண்டுகளுக்கு முன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com