மேற்குவங்கத்தில் பண்டிகை நாள்களில் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் தீபாவளி, காளிபூஜை, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு நாள்களில் 2 மணி நேரம் மட்டும் பசுமைப் பட்டாசுகளை வெடிக்க மாநில அரசு அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் கரோனா பரவல் காரணமாகவும் சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் பண்டிகை கொண்டாட்டங்களின்போது பட்டாசு வெடிக்க, விற்பனை செய்யத் தடை விதிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மேற்குவங்கத்தில் கரோனா பரவல் நிலையைக் கருத்தில்கொண்டு தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளின்போதும் பசுமைப் பட்டாசு உள்பட எல்லாப் பட்டாசுகள் விற்பனை செய்ய, வெடிக்கத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.