
கோப்புப்படம்
மும்பையில் சி.1.2 என்ற புதிய வகை கரோனா கண்டறியப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் சி.1.2 என்ற புதிய வகை கரோனா கண்டறியப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 3ஆம் தேதி முதல் மும்பை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை கட்டாயமாக்கப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "சி.1.2 என்ற புதிய வகை கரோனா கண்டறியப்பட்டதையடுத்து பிரிட்டன், ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளிலிருந்து மும்பை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் தங்களின் சொந்த செலவில் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய வழிகாட்டுதலின்படி, அரசு தனிமைப்படுத்தும் மையங்களில் வெளிநாட்டு பயணிகள் தங்கும் வகையில் கொண்டுவரப்பட்ட விதி நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களுக்கு புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சி.1.2 என்ற கரோனா வகை முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டபோதிலும் இந்தியாவில் இதனால் யாரும் பாதிப்படையவில்லை என அரசு தரப்பு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | மூத்த பத்திரிகையாளர், மாநிலங்களவை முன்னாள் எம்.பி. சந்தன் மித்ரா காலமானார்
இதற்கு மத்தியில், சி.1.2 கரோனா வகை ஆறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு செவ்வாய்கிழமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.