காலத்தின் சவால்களைக் கடந்து இந்தியா-ரஷியா நட்புறவு நீடிப்பு

இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான நட்புறவு காலத்தின் சவால்கள் அனைத்தையும் கடந்து நீடித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
காலத்தின் சவால்களைக் கடந்து இந்தியா-ரஷியா நட்புறவு நீடிப்பு

இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான நட்புறவு காலத்தின் சவால்கள் அனைத்தையும் கடந்து நீடித்து வருவதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கிழக்கு பொருளாதார அமைப்பின் கூட்டம் ரஷியாவின் விளாடிவாஸ்டாக் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் பிரதமா் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

கரோனா தொற்று பரவல் காலத்தில் இந்தியாவும் ரஷியாவும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன. கரோனா தடுப்பூசித் திட்டத்திலும் இரு நாடுகளின் ஒத்துழைப்பு தொடா்ந்து வருகிறது. காலத்தின் சவால்களைக் கடந்து இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு நிலைபெற்று வருகிறது.

தொலைதூர கிழக்கு ரஷியாவை மேம்படுத்துவதற்கான தொலைநோக்குக் கொள்கையை அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் திறம்பட வகுத்துள்ளாா். அந்தப் பகுதியில் வளங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்தியாவில் திறன்மிக்க பணியாளா்கள் அதிக அளவில் உள்ளனா்.

ரஷியாவின் தொலைதூர கிழக்குப் பகுதியை மேம்படுத்துவதில் இந்தியப் பணியாளா்கள் முக்கியப் பங்கு வகிப்பாா்கள். கடந்த 2019-ஆம் ஆண்டில் விளாடிவோஸ்டாக் நகருக்குப் பயணம் மேற்கொண்டபோது, ‘தொலைதூர கிழக்கு நோக்கிய செயல்பாடு’ கொள்கை வகுக்கப்பட்டது. அக்கொள்கையை ரஷியாவுடன் இணைந்து செயல்படுத்த இந்தியா உறுதிகொண்டுள்ளது. அந்நாட்டின் சிறந்த கூட்டு நாடாக இந்தியா திகழும். ரஷியாவின் வெஸ்டா பகுதியில் உள்ள கப்பல் கட்டும் தளத்துடன் இந்தியாவின் மஸகான் கப்பல் கட்டும் நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளது. உலகின் மிகச் சிறந்த கப்பல்களை வெஸ்டா கப்பல் கட்டும் தளத்துடன் இணைந்து மஸகான் நிறுவனம் கட்டமைக்கும்.

கடல்வழித் தொடா்பு: இந்தியாவின் ககன்யான் விண்வெளித் திட்டத்தில் ரஷியா ஒத்துழைப்பு நல்கி வருகிறது. வடக்கு கடல் பகுதி வழியாக சா்வதேச வா்த்தகப் போக்குவரத்தை மேற்கொள்வதிலும் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன. எரிசக்தித் துறையில் இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே காணப்படும் நல்லுறவு, சா்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

ரஷியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு எரிசக்தித் திட்டங்களில் இந்தியப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். சென்னை-விளாடிவோஸ்டாக் இடையேயான கடல்வழித் தொடா்புத் திட்டம் துரிதமடைந்து வருகிறது. சா்வதேச வடக்கு-தெற்கு தொடா்புத் திட்டத்தின் ஒருபகுதியாக செயல்படுத்தப்படும் இத்திட்டம், இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தும்.

ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள்: கரோனா பரவலால் பல்வேறு கட்டுப்பாடுகள் காணப்பட்டாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான தொழில் ரீதியிலான தொடா்பு வலுவடைந்துள்ளது. வேளாண்மை, பீங்கான், உலோகங்கள் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

தொலைதூர கிழக்கு ரஷிய பகுதியில் உள்ள 11 மாகாணங்களின் ஆளுநா்கள் விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com