
கோப்புப்படம்
வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை மீறியதாக எழுப்பப்பட்ட புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸூக்கு எதிராக பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த 2009 முதல் 2015 வரை, வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை மீறியதாக எழுப்பப்படும் புகாரில் 10,600 கோடி அபராதத்தை ஏன் உங்களுக்கு வதிக்கக் கூடாது என பிளிப்கார்ட், அதன் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் சிலருக்கு அமலாக்கத்துறை ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து, நோட்டீஸை ரத்து செய்யக் கோரி பன்சால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கத்திற்கு மாறான காலதாமதத்திற்கு பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். முன்னதாக, குற்றச்சாடு குறித்து விளக்கம் அளித்த பிளிப்கார்ட், "இந்திய சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட்டுவருகிறோம். சம்மந்தப்பட்ட துறைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என தெரிவித்தது.
வெளிநாட்டு முதலீட்டு சட்டத்தின்படி, பல்வேறு நிறுவனங்களின் பலதரப்பட்ட பொருள்களை விற்கும் சில்லரை வர்த்தக நிறுவனத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்ள் இச்சட்டங்களை மீறியதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை பல ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டுவருகிறது.
இதையும் படிக்க | ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த எம்எல்ஏ...அவரின் விளக்கத்தைக் கொஞ்சம் கேளுங்கள்
கடந்த 2018ஆம் ஆண்டு, பிளிப்கார்ட்டின் பெரும்பான்மை பங்குளை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கியது. அப்போது, சச்சின் பன்சால் பங்குகளை விற்ற நிலையில், சிறிய அளவிலான தன்னுடைய பங்கினை பின்னி பன்சால் தக்கவைத்துக் கொண்டார். சட்டத்தின்படி, பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில்தான் விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G