நொடிக்கு நொடி பரபரப்பு; தில்லிக்கு விரைந்த சத்தீஸ்கர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தில்லிக்கு விரைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டுவருகிறது.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல்  (கோப்புப்படம்)
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் (கோப்புப்படம்)

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் முதலமைச்சர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் கேட்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்எல்ஏக்கள் புதன்கிழமை அன்று தில்லிக்கு விரைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தில்லிக்கு விரைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இருப்பினும், தில்லி சென்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், இதை மறுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சத்தீஸ்கர் பயணம் குறித்து திட்டமிடவே தில்லி சென்றதாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து ராமானுஜ்கஞ்ச் தொகுதி எம்எல்ஏ பிரஹஸ்பத் சிங் கூறுகையில், "சுமார் 15-16 கட்சி எம்எல்ஏக்கள் தில்லியில் பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர். 

ராகுல் காந்தி சத்தீஸ்கருக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளோம். அனைத்து மாநில எம்எல்ஏக்களும் பயன் பெற அவர் தனது சுற்றுப்பயணத்தை சிறிது நீட்டிக்க வேண்டும் என்று எங்கள் மாநில பொறுப்பாளர் பி.எல். புனியா மூலம் ராகுல் காந்திக்கு கோரிக்கை விடுக்க விரும்பினோம். இந்த கோரிக்கையை முன்வைப்பதற்காகவே நாங்கள் தில்லிக்கு வந்துள்ளோம், இது தொடர்பாக வியாழக்கிழமை புனியாவிடம் பேசுவோம். எங்கள் வருகையை வேறு காரணத்திற்காக தொடர்பு படுத்தக் கூடாது" என்றார்.

பாகலுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தில்லிக்கு வந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, "எங்கள் கட்சிக்கு 70 எம்எல்ஏக்களின் (90 உறுப்பினர்கள் கொண்ட மாநில சட்டப்பேரவையில்) ஆதரவு உள்ளது. அவர்களில் 60 சட்டப்பேரவை உறுப்பினர்கள், கடந்த முறையே எல்லாவற்றையும் புனியாவிடம் தெரிவித்து விட்டோம்.

கட்சி மேலிடத்தின் ஆசீர்வாதம் உள்ள நிலையில், ​​எம்எல்ஏக்கள் மற்றும் முதலமைச்சர் சிறப்பாக பணியாற்றிவருகின்றனர். முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற பிரச்னையே இங்கு இல்லை. சத்தீஸ்கரில் நிலைமை பஞ்சாப்பைப் போல் இல்லை. ஒரு தலைவரை மகிழ்விப்பதற்காக எந்த ஒரு கட்சியின் மேலிடமும் முழு அரசாங்கத்தையும் பணயம் வைக்க மாட்டார்கள்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com