கோவா முன்னாள் முதல்வர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார்

கோவா மாநில முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த கோவா முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ.
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்த கோவா முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ.


கொல்கத்தா: கோவா மாநில முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.
கோவாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் திரிணமூல் காங்கிரஸில் இணைந்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவரான லூயிசினோ ஃபெலேரோ இரு நாள்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகியதுடன் எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்தார். அப்போதே, அவர் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியை புகழ்ந்து பேசி இருந்தார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் அக்கட்சியில் ஃபெலேரோ இணைந்தார். திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செளகதா ராய், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திரிணமூலில் இணைந்த பிறகு ஃபெலேரோ பேசுகையில், "நான் எப்போதும் காங்கிரûஸ சேர்ந்தவன்தான். அதே கொள்கைகளைத்தான் இப்போதும் கடைப்பிடித்து வருகிறேன். பாஜகவை தோற்கடிப்பதுதான் எனது நோக்கம். இன்று திரிணமூல் காங்கிரஸில் இணைந்ததன் மூலம், எனது லட்சியத்தை நோக்கிய பயணத்தை மேம்படுத்தியுள்ளேன்' என்றார்.
முன்னதாக, ஃபெலேரோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மம்தா பானர்ஜியை சந்தித்துப் பேசினர்.
கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து தனித்துப் போட்டியிட இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
2017 கோவா பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து அக்கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர். இதில் 2019-இல் மட்டும் 10 எம்எல்ஏக்கள் மொத்தமாக விலகி பாஜகவில் இணைந்தனர். இப்போது, கோவாவில் காங்கிரஸூக்கு 4 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com