சட்ட விரோதமாக இடிக்கப்பட்ட கட்டிடங்கள்...சம்பவ இடத்திற்கு விரைந்த காங்கிரஸ் குழுவினர்...என்ன நடந்தது?

தில்லி ஜஹாங்கீர்பூருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தில்லி பொறுப்பாளர் சக்திசிங் கோஹில் சென்றனர்.
அஜய் மக்கான்
அஜய் மக்கான்

தில்லி ஜஹாங்கீர்பூரில் உள்ள ஆக்கிரமிப்புகளை வடக்கு தில்லி மாநகராட்சி நேற்று அகற்றியது. இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீர்பூருக்கு காங்கிரஸ் தலைவர்கள் அடங்கிய குழு சென்றது. ஆனால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

தில்லி ஜஹாங்கீர்பூருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தில்லி பொறுப்பாளர் சக்திசிங் கோஹில் சென்றிருந்தனர்.

முன்னதாக, சட்டவிரோதமாக எந்த முன் அறிவிப்பும் இன்றி கட்டிடங்கள் இடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நிறுத்தப்பட்டன. 

செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசிய அஜய் மக்கான், "ஏழை மக்கள் மற்றும் அவர்களது வாழ்வாதாரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" என்றார். நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி பேசிய அவர், "விதிகளை மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது.

நான் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சராகவும் இருந்தேன். சட்டங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது எனக்குத் தெரியும். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களால் இதைச் செய்ய முடியாது. பாஜக தலைவர்கள் பொய் சொல்கிறார்கள்" என்றார்.

இந்த விவகாரத்தில் பாஜகவை கடுமையாக சாடியுள்ள சக்திசிங் கோஹில், "நாட்டில் அதிகரித்துவரும் விலைவாசி உயர்விலிருந்து மக்கள் கவனத்தை திருப்பவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது" என்றார்.

இதுகுறித்து தில்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் கூறுகையில், "இங்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புல்டோசர்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன. ஒரு சார்பாகவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்கள் முஸ்லிம்களை குறிவைக்கிறார்கள். அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்த நாங்கள் இங்கு வந்துள்ளோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com