
கொச்சி: தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீா்புரி பகுதியில் புல்டோசா்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ரமேஷ் சென்னிதலா, நாட்டிற்கு புல்டோசர் அரசியல் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
"நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயகவாதிகளும் ஒன்றிணைந்து இதுபோன்ற நகர்வுகளை முறியடிக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். நாட்டிற்கு புல்டோசர் அரசியல் தேவையில்லை, அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தேவை," என்று அவர் கூறினார்.
"பாஜக ஏழைகளின் வீடுகளையும் நிறுவனங்களையும் புல்டோசர்களைக் கொண்டு இடுப்பது மட்டுமல்லாமல், அரசியலமைப்பு மற்றும் நீதித்துறையையும் தகர்க்கிறது. பாஜகவின் இந்த வெட்கக்கேடான செயல் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கான சவால் விடுவதாக உள்ளது. அரசின் இந்த பழிவாங்கும் செயல்கள் நிறுத்தப்பட வேண்டும்," என்று சென்னிதலா கூறினார்.
கடந்த 16 ஆம் தேதி சனிக்கிழமை ஜஹாங்கிர்புரி பகுதியில் ஹனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின் போது இரு சமூகத்தினருக்கு இடையே கல்வீச்சு, தீவைப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வன்முறை மோதல்கள் நிகழ்ந்தன.
இதையடுத்து வன்முறையால் பாதிக்கப்பட்ட ஜஹாங்கீா்புரியில் புல்டோசா்களைப் பயன்படுத்தி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அகற்றல் நடவடிக்கை தொடங்கும் என வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) கூறிய நிலையில், நோட்டீஸ் அளிக்காமல் புதன்கிழமை காலை 9 மணிக்கே இடிப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இருப்பினும், கட்டடங்களை இடிப்பது தொடா்பான விவகாரத்தில் "தற்போதைய நிலையே" தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.