
பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், 2 நாள் அரசுமுறைப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்தார். அவர் குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது, வதோதராவில் உள்ள ஜேசிபி இயந்திரம் தயாரிப்பு ஆலைக்கும் சென்றார்.
இதையும் படிக்க.. மரியுபோலில் புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்
அங்கு நிறுத்தப்பட்டிருந்த புல்டோசர் எனப்படும் ஜேசிபி இயந்திரத்தைப் பார்த்ததும் போரிஸ் ஜான்சன் துள்ளிக்குதித்தபடி அதில் ஏறி நின்று கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.
ஏற்கனவே நாட்டில் புல்டோசர் ஆட்சி என்று பல்வேறு விமர்சனங்களும் சர்ச்சைகளும் வெடித்திருக்கும் நிலையில், இப்படி, வெளிநாட்டு பிரதமர் ஜேசிபி மீது ஏறி போஸ் கொடுத்தால் சும்மா இருப்பார்களா? இன்று பல ஊடகங்களில் முகப்புப் பக்கத்தை இந்த புகைப்படம்தான் அலங்கரித்துள்ளது.
தில்லி உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்று கூறி, முஸ்லிம் மக்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் புல்டோசர்களைக் கொண்டு இடிக்கப்பட்டு வருவதும், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு சென்றிருப்பதும் தெரியாமல், வெளிநாட்டு பிரதமர் ஜேசிபியில் நின்றவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பது குறித்து பல விதமான கருத்துகளையும் மக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
நேற்று குஜராத் மாநிலம், அகமதாபாத் நகருக்கு வந்த போரிஸ் ஜான்சன், வெள்ளிக்கிழமை தில்லி சென்றுள்ளார்.
இந்த பயணத்துக்கு முன்பு, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தனது இந்தியப் பயணம் குறித்து போரிஸ் ஜான்சன் புதன்கிழமை உரையாற்றியிருந்தார். அப்போது, அவா் கூறியதாவது:
பிரிட்டனின் காா்ன்வால் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா கலந்து கொண்டது. அதைத் தொடா்ந்து, இந்தியாவுடனான உறவை வலுப்படும் வகையில் அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறேன். எனது பயணத்தால் இந்தியா-பிரிட்டன் இடையே ராணுவம், வா்த்தகம், மக்கள் தொடா்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவடையும்.
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியையும், பிரிட்டனில் முதலீடு செய்திருக்கும் தொழிலதிபா்களையும் சந்தித்துப் பேச இருக்கிறேன். பிரிட்டனில் இருந்து முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளேன் என்றாா் அவா்.
பிரிட்டனில் கடந்த ஆண்டு ஜி7 உச்சிமாநாடு நடைபெற்றபோது கரோனா பரவல் காரணமாக, பிரதமா் மோடியால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை. அந்த மாநாட்டில் அவா் காணொலி முறையில் பங்கேற்று உரையாற்றினாா். அதன் பிறகு கடந்த நவம்பரில் நடைபெற்ற கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பிரதமா் மோடியும் போரிஸ் ஜான்சனும் நேரில் சந்தித்துக் கொண்டனா். போரிஸ் ஜான்சன் இதற்கு முன்பு 2 முறை இந்தியா வருவதற்கு திட்டமிட்டாா். ஆனால், கரோனா காரணமாக அவருடைய பயணம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.