மரியுபோலில் புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்

மரியுபோலில் உள்ள மன்ஹஷ் கிராமத்தில் மிகப்பெரிய புதைகுழியில் சுமார் 3,000 முதல் 9,000 குடிமக்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரியுபோலில் மெகா புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்
மரியுபோலில் மெகா புதைகுழிகளில் 3,000-9,000 பேர் புதைப்பு: அதிகாரிகள்

மாஸ்கோ: மரியுபோலில் உள்ள மன்ஹஷ் கிராமத்தில் மிகப்பெரிய புதைகுழியில் சுமார் 3,000 முதல் 9,000 குடிமக்கள் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துறைமுக நகரமான மரியுபோலிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் இந்த மன்ஹஷ் கிராமத்தைக் கைப்பற்றிய ரஷிய படைகள், அங்குதான் குவிக்கப்பட்டுள்ளது.

மேக்ஸர் தொழில்நுட்பத்தின் உதவியோடு செயற்கைக்கோள்  மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்புகளை ஆராய்ந்து, மரியுபோல் நகர கவுன்சில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில், புச்சா பகுதியில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழியை விடவும் 20 மடங்கு பெரிய புதைகுழி மன்ஹஷ் பகுதியில் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மரியுபோலில் ஏப்ரல் மாதம் முழுவதும் ரஷிய படைகள் மிகப்பெரிய பள்ளங்களைத் தோண்டி அதில் உக்ரைன் மக்களின் உடல்களை நிரப்பி மூடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதைகுழிகளில், ஒரு உடல்களுக்கு மேல் மற்றொரு உடல்களைப் போட்டு கொத்து கொத்தாக உடல்களைப் புதைத்திருப்பதாகவும், 85 மீட்டர் நீளம் கொண்ட இதுபோன்ற நான்கு புதைகுழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக தெரிய வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரியுபோல் நகரில் மட்டும் ரஷிய படைகளின் தாக்குதலால் உள்ளூர் மக்கள் சுமார் 22,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உள்நாட்டுச் செய்தி தெரிவிக்கிறது.

முன்னதாக, மரியுபோலின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய ரஷியா, புதன்கிழமை அளிக்கப்பட்ட கெடுவுக்குள் அஸோவ்ஸ்டல் ஆலையில் பதுங்கியிருக்கும் உக்ரைன் படையினா் சரணடையாவிட்டால் அந்த ஆலைக்குள் நுழைந்து அவா்களைக் கைது செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்தத் திட்டத்தை கைவிட்டு இரும்பு ஆலையை மிகக் கடுமையாக முற்றுகையிடுமாறு புதின் உத்தரவிட்டிருந்தார். 

உக்ரைன் போா் தொடா்பாக விளாதிமீா் புதினை பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கெய் ஷாய்கு மாஸ்கோவிலுள்ள அதிபா் மாளிகையில் சந்தித்து விளக்கம் அளித்தாா்.

அப்போது, உக்ரைனின் மரியுபோல் நகரை அரசுப் படையினரிடமிருந்து ‘விடுவித்து’ விட்டதாக புதினிடம் ஷாய்கு தெரிவித்தாா். எனினும், இன்னும் ஆயிரக்கணக்கான உக்ரைன் வீரா்கள் சரணடைய மறுத்து, அந்த நகரின் அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கியிருப்பதாக ஷாய்கு ஒப்புக்கொண்டாா். அந்த ஆலைக்குள் தாக்குதல் நடத்தி நுழைந்து, பதுங்கியுள்ள உக்ரைன் வீரா்களைக் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

அதையடுத்து, ஷாய்குவிடம் விளாதிமீா் புதின் கூறியதாவது:

மிகப் பெரிய அஸோவ்ஸ்டஸ் இரும்பு ஆலையின் சிக்கலான கட்டடங்களுக்குள் நுழைந்தும், சுரங்கப் பாதைகளில் தவழ்ந்தும் சென்று உக்ரைன் வீரா்களைப் பிடிப்பது நடைமுறைக்கு ஒத்துவராது. எனவே, அங்கு தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டியதில்லை.

அதற்குப் பதிலாக, ஒரு ஈ கூட வெளியேற முடியாத அளவுக்கு அந்த இரும்பு ஆலையின் முற்றுகையைக் கடுமையாக்க வேண்டும் என்று அவா் உத்தரவிட்டாா்.

தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

தற்போது கிழக்குப் பகுதியில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக தீவிர தாக்குதல் நடவடிக்கையை ரஷியப் படை மேற்கொண்டு வருகிறது.

டான்பாஸ் பிராந்தியத்தையும் ஏற்கெனவே தெற்குப் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு தாங்கள் கைப்பற்றிய கிரீமியா தீபகற்பத்தையும் இணைப்பதற்காக, இடையிலுள்ள பகுதிகளையும் கைப்பற்றுவதில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, அந்தப் பகுதியில் அமைந்துள்ள மரியுபோல் நகரை முற்றுகையிட்டு ரஷியப் படையினா் பல வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதில் ஏராளமான பொதுமக்கள் பலியானதாகக் கூறப்பட்டது.

மரியுபோலில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய ரஷியா, ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரா்கள் தங்களிடம் சரணடைந்ததாகக் கூறியது.

எனினும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உக்ரைன் வீரா்களும் அவா்களுடன் இணைந்து சண்டையிட்டு வந்த சா்ச்சைக்குரிய அஸோவ் படையினரும் மரியுபோலில் உள்ள 10 கி.மீ. பரப்புடைய அஸோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் பதுங்கி சண்டையிட்டு வருகின்றனா். அவா்களுடன் சுமாா் 1,000 பொதுமக்களும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களின் நிலை என்னவானது என்பது இதுவரை தெரியவரவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com