காங்கிரஸில் இணைவாரா பிரசாந்த் கிஷோர்? புதிய ஒப்பந்தத்தால் குழப்பம்

தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் ஐ-பேக் நிறுவனம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது அரசியல் அரங்கில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸில் இணைவாரா பிரசாந்த் கிஷோர்? புதிய ஒப்பந்தத்தால் குழப்பம்

காங்கிரஸ் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் ஐ-பேக் நிறுவனம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது அரசியல் அரங்கில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பாண்டு இறுதியில் ஹிமாசல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலும், வரும் 2024-இல் மக்களவைத் தோ்தலும் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்குள் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் கட்சித் தலைமை இறங்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக, பிரசாந்த் கிஷோா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளாா். அந்த ஆலோசனைகள் குறித்து ஆராய்ந்த 8 போ் கொண்ட காங்கிரஸ் குழு, கடந்த வாரம் தங்களது அறிக்கையை தலைமையிடம் வழங்கியுள்ளது.

இதற்கிடையே, பிரசாந்த் கிஷோரை காங்கிரஸில் சோ்த்துக் கொள்வது குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. கட்சியின் தலைவர் சோனியா காந்தியை கடந்த வாரத்தில் பல முறை சந்தித்த பிரசாந்த் கிஷோர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதற்கிடையே, தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸுக்கு எதிராக உள்ள தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே. சந்திரசேகா் ராவுடன், கடந்த இரண்டு நாள்களாக நேரில் சந்தித்து பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டிர சமிதியுடன் இணைந்து பணியாற்ற பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏற்கனவே காங்கிரஸுக்கு எதிராக மாநில பேரவைத் தேர்தல்களில் பாஜக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பணியாற்றியதால் பிரசாந்த் கிஷோரை இணைப்பதில் சில மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் சூழலில், புதிய ஒப்பந்தமானது காங்கிரஸுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா ராஷ்டிர சமிதியுடனான ஒப்பந்தம் செய்ததை மறைமுகமாக விமர்சிக்கும் வகையும் தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர், “உன் எதிரியுடன் நண்பராக இருப்பவரை நம்பாதே” என டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைமைக்கு பல்வேறு முக்கிய தலைவர்கள் அழுத்தம் தரும் நிலையில், பிரசாந்தி கிஷோர் காங்கிரஸில் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com