பிகார் அரசியலில் அதிரடி மாற்றம்...நிதிஷ் குமாருக்கு மாற்றாக பாஜக முதல்வர்?

நிதிஷ் குமாரை நீக்கிவிட்டு துணை முதல்வராக உள்ள பாஜகவின் தர்கிஷோர் பிரசாத்தை முதல்வராக நியமிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வினய் பிகாரி உள்பட பலர் வெளிப்படையாக பேசிவருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மத்திய சட்டத்துறை அமைச்சகம் சார்பாக இன்று தில்லியில் நடைபெறவுள்ள முதல்வர்கள் கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொள்ளமாட்டார் என செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக, மாநில சட்டத்துறை அமைச்சரை கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகாரில் பாஜக முதல்வரை நியமிக்க வேண்டும் என அக்கட்சி தலைவர்கள் வெளிப்படையாக பேசிவருவது கூட்டணியில் குழுப்பத்தை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக, முதல்வர்கள் கூட்டத்தை நிதிஷ் புறக்கணிக்கவுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இன்று பிகாரில் பூர்ணியாவுக்கு செல்லும் நிதிஷ் குமார், எத்தனால் தொழிற்சாலையை திறந்து வைக்கவுள்ளார்.

நிதிஷ் குமாரை நீக்கிவிட்டு துணை முதல்வராக உள்ள பாஜகவின் தர்கிஷோர் பிரசாத்தை முதல்வராக நியமிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வினய் பிகாரி உள்பட பலர் வெளிப்படையாக பேசிவருகின்றனர். இம்மாதிரியான கோரிக்கைகள் அதிகரித்துவருவதால், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் நிதிஷ் தவிர்த்துவருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

புதன்கிழமையன்று நடைபெற்ற இஃப்தார் விருந்தில், துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத்தை காட்டிலும் எதிர்கட்சி தலைவர் தேஜஷ்வி யாதவுடன் நிதிஷ் குமார் இணக்கமாக நடந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பல வதந்திகளை கிளப்பியது. குறிப்பாக, தேஜஷ்வி யாதவ், அவரின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் வாசல் வரை சென்று நிதிஷ் குமார் வழி அனுப்பி வைத்தார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால்தான் அவர்களை வாசல் வரை சென்று நிதிஷ் குமார் வழி அனுப்பி வைத்ததாக அக்கட்சி தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இருப்பினும், 5 ஆண்டுகள் முழுவதுமே நிதிஷ் குமார்தான் முதல்வராக நீடிப்பார் என பிகார் பாஜக தலைமை மட்டும் இன்றி தில்லி மேலிடமும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் வெளிப்படையாக இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என நிதிஷ் எதிர்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில், பாட்னாவுக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இம்மாதிரியான எந்த உறுதிமொழியும் அளிக்கவில்லை என அரசியல் வட்டாரத்தில் முனுமுனுக்கப்பட்டுவருகிறது. இதற்கு மத்தியில், பிகாரில் அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளது. 

நிதிஷ் குமாரை துணை குடியரசு தலைவராக நியமித்துவிட்டு மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயை முதல்வராக நியமிக்க பாஜக திட்டமிட்டுவருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com